சென்னை : கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு, முதல் பிரசவத்திலேயே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை, வர்தமான் கார்டனை சேர்ந்தவர் ஆனந்த்(28). தனியார் நிறுவன சேல்ஸ்மேன். இவரது மனைவி சாந்தி(24). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதிகள், குழந்தை பாக்கியம் வேண்டி பல்வேறு கோவில்களுக்கு சென்றனர். பல மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்தாண்டு சாந்தி கர்ப்பமடைந்தார். கடந்த 28ம்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவரை கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் பிரசவத்திலேயே நான்கு குழந்தைகள் பிறந்தன. அதில், இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள். மருத்துவமனையில் சாந்தியும், அவரது நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
சாந்தியின் கணவர் ஆனந்த் கூறியதாவது: கடவுள் அருளால் நான்கு குழந்தைகள் கிடைத்துள்ளது. மாத சம்பளமாக 5,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். குடும்ப செலவுகளுக்கே அந்த பணம் போதுமானதாக இல்லை. நான்கு குழந்தைகளுக்கு பால், மருந்து, ஆடைகள் உள்ளிட்ட பராமரிப்பு செலவிற்கு பணம் தேவைப்படும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை நினைத்தால், குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்றே தெரியவில்லை. எனவே, எனது குழந்தைகள் பராமரிக்க தேவையான உதவிகளை அரசு தரப்பில் எதிர் பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ஆனந்த் கூறினார்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக