பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான விசாரணையைக் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளைக்கு மாற்றி வைத்தது. எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் இரு நாட்கள் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து நீதிபதி ஜகன்னாதன் தலைமையிலான பெஞ்ச் இம்முடிவை அறிவித்தது.
நாசர் மதானியின் ஜாமீன் மனு இத்துடன் இரண்டாவது முறையாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி மதானியின் ஜாமீன் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இருப்பினும் எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு 7 நாட்கள் கால அவகாசம் அளித்து வழக்கு மாற்றி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்று மீண்டும் மதானி ஜாமீன் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. எனினும் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய மேலும் இரு நாட்கள் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு மாற்றி வைத்தது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும் காவல்துறை வசம் இல்லாமல் இருக்கும் நிலையில், அநியாயமாக தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மதானி தன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். "காவல்துறை சமர்ப்பித்த முதல் இரு குற்றப்பத்திரிக்கைகளிலும் இல்லாதிருந்த தன்னுடைய பெயரை மூன்றாவது குற்றப்பத்திரிக்கையில் காவல்துறை திட்டமிட்டு இணைத்துள்ளது" என்றும் "கடந்த 17 ஆம் தேதி காவல்துறை என்னைக் கைது செய்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை எவ்வித ஆதாரமும் எனக்கு எதிராக சேகரிக்கவில்லை" எனவும் மதானி தன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி.இந்நேரம் .காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக