சென்னை:பிறந்து நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றில், கரு வளர்ந்த அதிசயம் சென்னையில் நடந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி விவசாயி காமாட்சி. இவருக்கு கடந்த செப்டம்பரில் ஆண் குழந்தை(வெற்றிவேல்) பிறந்தது. பிறந்ததில் இருந்தே அக்குழந்தையின் வயிற்றுப் பகுதி வீக்கத்துடன் காணப்பட்டது. சிறிது நாட்கள் கழித்து குழந்தைக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டது. தாய்ப்பாலும் சரியாக குடிக்கவில்லை.
குழந்தைக்கு சளி காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கலாம் என கருதி, திருவண்ணாமலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நாளுக்குநாள் குழந்தையின் வயிற்றில் வீக்கம் அதிகரித்தால், மேல் சிகிச்சைக்காக, கடந்த 10ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் வயிற்றில், நீர் கட்டியோ, புற்றுநோயோ இருக்கலாமென கருதிய டாக்டர்கள் அவற்றுக்கான பரிசோதனைகளை செய்தனர். பரிசோதனை முடிவில், குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்தது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முத்துகுமார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் முத்துகுமார் கூறியதாவது:பொதுவாக தாயின் வயிற்றில் ஒரு கரு தான் வளரும். ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் வளரும்போது, இரட்டை குழந்தை, இரு குழந்தைகள் உடல் ஒட்டிய நிலையில் பிறப்பது போன்றவை நிகழ்கின்றன. அதுபோல, ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் வயிற்றில் மற்றொரு கரு வளரும் அரிய நிகழ்வும் நடக்கும். ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோல நிகழும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற அறுவை சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் நடந்துள்ளது.
தற்போது, குழந்தை வெற்றிவேலின் வயிற்றில் வளர்ந்த கருவில், முதுகு தண்டுவடத்தை தவிர, ஒரு வளரும் கருவில் காணப்படும் தலைமுடி, கைவிரல்கள் ஆகியவை காணப்பட்டன. 14 செ.மீ., அகலமும், 12 செ.மீ., நீளமும் கொண்ட அக்கருவை அறுவை சிகிச்சை செய்து எடுத்தோம். முறையான பரிசோதனைக்காக அதை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை வெற்றிவேல் நலமாக உள்ளான்.இவ்வாறு டாக்டர் முத்துகுமார் கூறினார்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக