மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
தமிழக சட்டமன்றத்தில் இன்று (07.01.2011) நிகழ்த்தப்பட்ட ஆளுநரின் உரை பெரும் ஆரவார வானவேடிக்கையாகவே உள்ளது. மக்கள் நலன் சார்ந்த செய்திகள் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
1 ரூபாய் அரிசி திட்டம் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏழை மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ள விலைவாசியைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. சாதாரண மக்கள் காய்கறி கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி விஷம் போல் ஏறி வருகிறது. இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அரசு உறங்கிக் கொண்டிருப்பதும் 1 ரூபாய் அரிசிக்காக தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதும் வேதனைக்குரியது.
பல நகராட்சிகளில் அரசின் பாதாள சாக்கடை திட்டம் மக்களை படுகொலை செய்யும் திட்டமாகவே மாறியுள்ளது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட படுகுழிகள் மூடப்படாமல் அக்கறையற்ற அரசாங்கத்தின் அவலச் சின்னமாகத் திகழ்கின்றன.
முதலமைச்சரின் சொந்த ஊரான திருவாரூரிலேயே பாதாள சாக்கடை படுகுழிகளால் மக்கள் சொல்லொணாத் துயரை சந்தித்து வருகின்றனர்.
புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வானவேடிக்கை வார்த்தை ஜாலமாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. மிக அத்தியாவசியத் தேவை இருந்தும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் புதிய பணி இடங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
சிறுபான்மைக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அரசு அனுமதியும் மானியமும் மறுக்கப்பட்டு வருகின்றன.
கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திலேயே ஆட்கள் பற்றாக்குறையால் வேலைகள் தேங்கிக் கிடக்கும் சூழலில் புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குவதற்கான ஆளுநர் உரை அறிவிப்பு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. மக்கள் நலனை மையப்படுத்தாத ஆளுநரின் உரை குறித்த எங்கள் அதிருப்தியைப் பதிவு செய்கிறோம்.
நன்றி.தமுமுக.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக