|
“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”
பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.
செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.
“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக