எம்.எல்.ஏவைக் குத்திக் கொன்ற பெண்ணின் பெயர் ரூபம் பதக். பூர்னியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார். இவர் ஒரு ஆண்டுக்கு முன்னர், எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி தன்னை மூன்று ஆண்டுகளாக பலவந்தமாக வன்புணர்ந்து வருவதாகக் காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருந்தார். அவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. நீதிமன்ற விசாரணையின் போது, ஆசிரியையின் கணவர் எம்.எல்.ஏவிற்குச் சாதகமாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
எம்.எல்.ஏவின் மிரட்டலுக்கு அஞ்சியே ஆசிரியையின் கணவர் அவ்வாறு எம்.எல்.ஏவுக்குச் சாதகமாக வாக்குமூலம் அளித்ததாகச் சந்தேகம் எழும்பியிருந்தது. இந்நிலையில், இன்று காலை எம்.எல்.ஏ வீட்டுக்கு வந்த ஆசிரியை ரூபம் பதக், ஆத்திரத்துடன் எம்.எல்.ஏவைக் குத்திக் கொன்றார்.
நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியில் பாஜக சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட கேசரி, இத்தொகுதியில் இத்தோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏவைக் குத்திய ஆசிரியை மீது, எம்.எல்.ஏவின் பாதுகாப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கூட்டாகத் தாக்குதல் நடத்தினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகிலுள்ள மருத்துவமனையில் ஆசிரியை ரூபம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி.இந்நேரம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக