தமுமுக தலைமை பொதுக் குழுக் கூட்டம் மறுநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் பொதுக் குழு தொடங்கியது. பின்னர் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி சென்ற 2009 ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற பொதுக் குழு முதல் இந்த பொதுக் குழு வரையிலான செயற்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். இதன் பின் பொதுக்குழு தீர்மானங்களை தலைமை கழக நிர்வாகிகள் முன்மொழிந்தார்கள். தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமைப்புத் தேர்தல் தொடர்பாக செயற்குழு தீர்மானத்தை முன்மொழிந்து பேச சில செயற்குழு உறுப்பினர்கள் அனுமதி பெற்று பேசினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் அஸ்லம் பாஷா, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சலீமுல்லாஹ் கான், நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் மைதீன் சேட் கான், மதுரை மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் ஜபருல்லாஹ், வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமுமுக சகோதரர்கள் சார்பாக சவுதி கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் இது முக்கியமான காலக்கட்டம். சட்டமன்றத் தேர்தலையும் உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் எதிர்நோக்கும் இந்த சூழலில் தற்போதைய தலைமை நிர்வாக குழு தொடர்வது தான் அமைப்பு மற்றும் சமுதாய நலனுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே ஓர் ஆண்டுக் காலத்திற்கு தற்போதைய தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற செயற்குழுவின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்று பொதுக் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்கள். செயற்குழு முன்வைத்துள்ள தீர்மானத்திற்கு ஏகமனதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் ஜனவரி 2012 வரை தலைமை நிர்வாகிகளாக நீடிப்பார்கள்.
இதே நாளில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று அக்கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது நன்றியுரை ஆற்றினார்.
மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த இரு பொதுக்குழுக்களும் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்களை வரவேற்கும் வண்ணமையமான வரவேற்பு பலகைகள் காஞ்சி தெற்கு மாவட்டத்தினரால் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாநில மாநாடு போல் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுக்குழு திடல் மக்களால் நிரம்பி வழிந்தது. பொதுக்குழு திடலில் தொழுகை இடம், ஒழுச் செய்யும் வசதி, கழிப்பறை வசதி முதலியவை கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன. பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி மற்றும் செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் பொதுக் குழு ஏற்பாடு பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் எம். யாகூப், மாவட்ட செயலாளர்கள் யுசுப் சுலைமான். காமராஜபுரம் ஹைதர் மற்றும் மாவட்ட பொருளாளர் சைபுதீன் ஆகியோர் வழிகாட்டலில் மாவட்ட சகோதரர்கள் மிக சிறப்பான முறையில் பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோரின் நிறைவுரைகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பெரும் உற்சாக டானிக் அமைந்தது. உடனடியாக சட்டமன்றத் தேர்தலுக்கான களப் பணிகளை மறுநாளே தொடங்குவது என்ற உற்சாகத்துடன் அவர்கள் கலைந்துச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக