தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 62வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுக தலைவர் ''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நாளாக குடியரசு தினம் விளங்குகிறது. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உலகின் தலைசிறந்த சட்டமாக விளங்குகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மை, பேச்சுரிமை, ஜனநாயகம் சிறுபான்மை நலன் முதலிய கோட்பாடுகள் நமது நாட்டில் சிறந்த முறையில் பேணப்படுவதற்கு இத்தினத்தில் உறுதி எடுப்போமாக. இதேநேரத்தில் அதிகாரத்தையும், பணபலத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்குவோரை வாக்குச்சீட்டு வலிமையைப் பயன்படுத்தி உரிய தண்டனை அளிப்பதற்கும் நாம் உறுதி எடுப்போமாக'' எனவும், '''தமுமுக சார்பில் கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுகவின் 9 2வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்கள், மாநகர, நகர மற்றும் கிளைகளில் இரத்ததான முகாம்களும், மருத்துவ முகாம்களும், மரம் நடு விழாக்களும் நடைபெறுகின்றன'' என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது தமுமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி. மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மதுரை கௌஸ், வடசென்னை மற்றும் துறைமுகப் பகுதி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக