இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்படுள்ளதாவது:
"1640-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஜார்ஜ் கோட்டை, அரசு அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2006-ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை முந்தைய அரசு தேர்வு செய்தது. இதற்காக அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது.
ஆங்கிலேய கவர்னர் கன்னிமாரா பிரபு 1890 ஆம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் இருந்த சென்னையின் முதல் காவல் நிலையமான திருவல்லிக்கேணி காவல் நிலையமும் அகற்றப்பட்டது.
கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையைப் பராமரிக்க கோடிக்கணக்கில் செலவிட வேண்டியதிருப்பதாலும், நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகக் காரணம் கூறப்பட்டது.
ரூ.450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூ.1,100 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரமாண்டமான விழாவில் திறந்து வைக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தில் தலைமைச் செயலகம் மட்டுமின்றி, தமிழக சட்டசபையும் இயங்குகிறது,
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கோட்டை புதுப்பிக்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில், முந்தைய அரசால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தையும் மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. புதிய தலைமைச் செயலகத்தை முற்றிலும் கைவிடுவதற்கு தற்போதைய அரசு முடிவெடுத்திருப்பது தெரிகிறது.
இது சட்டவிரோதமானதும், அங்கீகாரமற்றதும், பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையும் ஆகும். பல கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியான செயல்பாடல்ல. தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை.
ஆட்சிப் பொறுப்பு ஏற்காத நிலையில் அமைச்சரவை ஒப்புதலில்லாமல் புதிய தலைமைச் செயலகத்தை இடம் மாற்றம் செய்ய யார் அதிகாரம் அளித்தனர் என்பதைத் தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர் ஆகியோர் விளக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவதென அரசு எடுத்திருந்த முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம்? என்பதையும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
எனவே, இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை, புதிய தலைமை செயலகத்தையும், சட்டசபையையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக