மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் விழாவை, நாங்கள் புறக்கணிக்கவில்லை. குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் அறிவித்த நரேந்திரமோடி பங்கேற்றதால், விலகி நின்றோம். அ.தி.மு.க.,வுடன், ம.ம.க.,வின் உறுதியான கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதை இலங்கை ராணுவ ரவுடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அன்று நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டஸ், ஆண்டனிராஜ், மாரிமுத்து, ஜான்பாலை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்தனர்.அவர்களுடைய உடல் கிடைக்காத நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மீனவர்களின் குடும்பத்துக்கு தலா, 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கி உத்தரவிட்டார்.ராமேஸ்வரத்தில் இருந்து அருளானந்தம் குழுவினரிடம், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இருந்த விக்டஸ் உடலை காட்டியுள்ளனர். அங்கேயே கழுத்து, கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இரு உடல்களை மறைத்து விட்டனர். அடுத்தடுத்து அந்த உடல்கள் கரை ஒதுக்கின. உடல் கிடைத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க வேண்டும் அல்லது ஏழு ஆண்டுகள் கழித்தே உதவித்தொகை வழங்கியிருக்க வேண்டும்.
இரண்டும் இல்லாமல், முன்கூட்டியே உதவித்தொகை வழங்கியதற்கு, இலங்கை அரசுக்கும், கருணாநிதிக்கும், நான்கு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், முன்கூட்டியே தெரிந்தது தான் காரணம். மீனவர்கள் கொலையான தகவல் தெரிந்தும், தேர்தலை முன்னிட்டு, அதை மறைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது, தமிழக அரசு வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும்.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மீனவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கியுள்ளது. அதேபோல, இலங்கை ராணுவத்தால் நடுக்கடலில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும், தமிழக மீனவர்களை காக்க, மீனவர் பாதுகாப்பு படையும் அமைக்க வேண்டும்.முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அதிகரித்து, அதை கண்காணிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். தி.மு.க., அரசு அமல்படுத்திய கட்டாய திருமணத்தடை சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக