|
காட்டுமன்னார்கோவில் :வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளாறு மற்றும் வெள்ளியங்கால் ஓடை வழியாக, அதிக அளவில் தண்ணீர் திறக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் தவித்து வருகின்றனர்.கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் 15 ஆயிரம் கன அடி நீர் பெருக்கெடுத்து வந்ததில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு வழியாக, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. வெள்ளியங்கால் ஓடை தண்ணீரோடு, மனவாய்க்கால் தண்ணீரும் சேர்ந்து பழைய கொள்ளிடம் வழியாக, 15 ஆயிரம் கன அடி நீர் சென்றதால் கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வெள்ளியங்கால் ஓடை வழியாக, தண்ணீர் வெளியேற்றுவது இரண்டு நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. வீராணத்தில் இருந்து பாழ்வாய்க்கால் வழியாக, வெள்ளாற்றில் 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால், வீராணத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது. அரியலூர் மாவட்டம் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, வெண்ணங்குழி ஓடை, பாப்பாக்குடி ஓடை வழியாக நேற்று காலை முதல் வீராணம் ஏரிக்கு 8,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளாற்றில் 86 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் வெள்ளாற்று வழியாக, வீராணம் தண்ணீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு முன் மூடப்பட்ட வெள்ளியங்கால் ஓடை மீண்டும் திறக்கப்பட்டு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வாய்க்காலில் மனவாய்க்கால் 10 ஆயிரம் கன அடி, மழை நீர் 3,000 கன அடி என மொத்தம் 20 ஆயிரம் கன அடி வெள்ளியங்கால் ஓடை வழியாக, பழைய கொள்ளிடம் ஆற்றில் செல்வதால் கொள்ளிடக்கரை கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளியங்கால் வழியாக கூடுதல் நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற என்ன செய்வதென தெரியாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக