வங்கிகள் அதிக எண்ணிக்கையில் பெருகி, ஒவ்வொரு வங்கியும் அதிகக் கிளைகளைத் தொடங்கி பெரும் தொழில்போட்டிகள் நடைபெறும் இந்த நாளில், வங்கிகளுக்கு மாணவர்களைக் கண்டால் ஒருவிதமான வெறுப்பு ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. கல்விக் கடன் தருவது என்றாலும் சரி, சாதாரணமாக ஒரு வங்கிக் கணக்குத் தொடங்குவது என்றாலும் சரி, மாணவர்களை வங்கிகள் நடத்தும் விதத்தைப் பார்த்தால் வருத்தம் தருவதாகவே இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்தந்தத் துறை வாயிலாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை இந்தக் கல்வி உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளிலேயே பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால், இத்தகைய விநியோக முறையில், பணம் பட்டுவாடா செய்யும் அதிகாரி ஒவ்வொரு மாணவரிடமும் குறிப்பிட்ட
தொகையை முறைகேடாகப் பிடித்தம் செய்துகொண்டு, மீதிப்பணத்தைத் தருவதும், முழுத் தொகைக்குக் கையெழுத்துப் போடும்படி மாணவர்களை நிர்பந்திப்பதுமான ஊழல் நடந்து கொண்டிருந்தது. மிகச் சிறிய தொகை பிடித்தம் செய்தபோது மாணவர்கள் இதை அவர்களுக்கான சேவைக் கட்டணமாகப் பொறுத்துக்கொண்டனர். ஆனால், ஓரளவுக்கு மேலாகச் சென்றபோது எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.
இத்தகைய புகார்கள் அதிகமாக வரத் தொடங்கின.
சில தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் இந்தத் தொகைக்கான கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு, படிப்பை முடித்துச் செல்லும்போது வாங்கிக்கொள் என்பதும், படிப்பை முடித்து இடமாற்றுச் சான்று பெறும் வேளையில், கல்விஅறக்கட்டளைக்கு உன்னால் இயன்ற நிதி கொடு என்று அன்புக் கட்டளையிடுவதாகவும்கூட புகார்கள் வந்தன. பிறகுதான், அரசுக்கு விழிப்பு வந்தது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை காசோலையாக அளிக்கும் நடைமுறையை அரசு அறிமுகம் செய்தது. இதிலும்கூட சில ஆள்மாறாட்டங்கள் நடைபெறத் தொடங்கியதால், அந்தக் காசோலையை "அக்கவுன்ட் பேயி ஒன்லி' என்று குறுக்குக்கோடு போட்டுத் தரும் நடைமுறை
ஏற்பட்டுள்ளது. இந்தக் காசோலையை வங்கிக் கணக்கில் செலுத்தி, பிறகுதான் பணத்தைப் பெற முடியும். மிக நல்ல நடைமுறையை அரசு அறிமுகம் செய்திருக்கும் இந்த
வேளையில், மாணவர்களுக்குச் சேமிப்புக் கணக்குத் தொடங்குவதில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வற்புறுத்தும் வங்கிகள், வரும் மாணவர்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை. "உன் இருப்பிட முகவரி எது? நீ அந்தக் கிளைக்குப் போ, இங்கே வராதே' என்று விரட்டுகின்றன.
சேமிப்புக் கணக்குத் தொடங்குவதற்கான படிவங்கள் வழங்கக்கூட மறுக்கின்றன. "கோர் பேங்கிங்' என்ற நடைமுறையே எங்கிருந்தும் ஒரு கணக்கை இயக்கலாம் என்கிற அடிப்படையில் உருவானதுதான். ஒரு வாடிக்கையாளரின் முகவரி எங்கே இருந்தால் என்ன? இதில் பாதிக்கப்படும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து வருபவர்கள்தான். குறைந்தபட்சம் ரூ. 500 டெபாசிட் செய்ய வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை. இந்தக் கல்வி உதவித் தொகை பெறும்
மாணவர்களில் 90 சதவீதம் பேர் நிச்சயமாக ஏழைகள். இவர்களுக்குக் கிடைக்கப்போகும் கல்வி உதவித் தொகையே சராசரியாக ரூ. 1,000 தான். தொடர்ந்து அந்தக் கணக்கை உயிர்ப்பித்துக்கொண்டிருக்க இவர்கள் வியாபாரிகளோ, சம்பளக்காரர்களோ அல்ல.
ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளராகச் சேர்க்க விரும்பும் வங்கிகள், அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் தங்கள் வங்கி மூலமாக வழங்க, "ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்' வசதியை அளிக்க முன்வருகின்றன. ஏனென்றால், அந்த நிறுவனத்தின் மற்ற கணக்குப் பரிமாற்றங்களால் வங்கிக்கு ஆதாயம் உண்டு. பள்ளி மாணவர்களிடம் எத்தகைய ஆதாயத்தைப் பெற முடியும்? இந்த மாணவர்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துவார்கள் என்பதால், இவர்களுக்கான தனி சேமிப்புக் கணக்கை உருவாக்குவது ஒரு பணிச்சுமை என்றே வங்கிகள் கருதுகின்றன.
இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பள்ளியின் மாணவர்கள் அனைவருக்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கை உருவாக்கித் தரும் சேவையைக் கல்வித் துறை அல்லது அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரே செய்துதர வேண்டும் என்கிற நடைமுறையை உருவாக்கினால்கூட போதுமானது. இத்தகைய நடைமுறை, இருப்பிடச் சான்று, குறைந்தபட்ச டெபாசிட் ஆகிய நிபந்தனைகளைத் தளர்த்த உதவும். மாணவர்களிடம் சேமிப்பு வழக்கத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும்.
கல்விக் கடன் வழங்குவதிலும் இப்படித்தான் மாணவர்கள் அவமானப்படுகிறார்கள். அவரவர் முகவரி எங்கே இருக்கிறதோ, அந்த முகவரிக்கு அருகில் உள்ள, மாவட்ட ஆட்சியர் பட்டியலிடுகிற வங்கியில்தான் அந்த மாணவர் கல்விக் கடன் பெறவேண்டும் என்கிற நிபந்தனை அர்த்தமற்றது. கல்விக்கான வங்கிக் கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தேவையற்ற நிபந்தனைகளும் சிக்கல்களும் இந்த வட்டித் தள்ளுபடியைக்கூட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தடுக்கின்றன. வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டுமானால், ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கும் குறைவு என்கிற சான்றிதழை அந்தந்தப் பகுதியில் உள்ள வருவாய்த்துறை வட்டாட்சியர்களிடம் பெற்றுத் தர, ஒரு படிவத்தை அந்தந்த வங்கித் தலைமை அலுவலகங்கள் உருவாக்கியுள்ளன. இதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு இல்லையா? அந்த மாணவர்களுக்கு அஞ்சலில் ஒரு கடிதத்துடன், படிவத்தையும் இணைத்து அனுப்பி, இதைப் பூர்த்தி செய்து சலுகையைப் பெறுங்கள் என்று சொல்ல வேண்டியது வங்கியின் கடமை இல்லையா? அல்லது ஒரு மாணவன் மீதான கனிவாகக்கூட இதைச் செய்யலாமே!
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணங்களை வரைவோலையாகக் கேட்கும்போது, இவர்களிடமும் அதே கமிஷன் தொகை வசூலிக்கிறார்களே! படிக்கும் மாணவர்களுக்காக இத்தகைய வரைவோலைக்குக் கமிஷனைப் பாதியாகக் குறைத்தால்கூட மாணவர்களுக்கு ஒரு பத்து ரூபாய் மிச்சமாகுமே!
தொழிலதிபர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக மட்டும்தானா வங்கிகள்? பொதுமக்களின் சேமிப்பில்தானே இந்த வங்கிகளின் லாபமே இருக்கிறது என்கிற உண்மையை வங்கி மேலாளர்கள் தொடங்கி ரிசர்வ் வங்கி வரையில் உணர மறுப்பது ஏன்? காசுள்ள இடத்தில் கருணை இல்லை. என்ன செய்ய?
-நன்றி தினமணி தலையங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக