ஹதீஸ் 45. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி! நூல்: புகாரி, முஸ்லிம்
அரபுகளிடத்தில் அஸ் ஸுரஆ என்பதன் அசல் பொருள், மக்களை அதிகமாக கீழே வீழ்த்துபவன் என்பதாகும்.
ஹதீஸ் 46. ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது இரு மனிதர்கள் பரஸ்பரம் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டது. அவருடைய நரம்புகள் புடைத்து விட்டன. அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் ஒரு வார்த்தையை அறிவேன். அதை அவர் சொன்னரெனில்அவரது கோபம் அகன்றுவிடும். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அவர் சொன்னால் இவரது கோபம் போய்விடும்! அப்பொழுது மக்கள் அந்த மனிதரை நோக்கிச் சொன்னார்கள்: விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் நீ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் சொல்கிறார்கள்’ நூல்: புகாரி, முஸ்லிம்
தெளிவுரை
கோபம் கொண்ட மனிதனின் உள்ளத்தில் ஷைத்தான் தீ மூட்டிச் சூடேற்றுகிறான்! அதனால் கோபம் கொண்டவனின் முகம் சிவந்து விடுகிறது. நரம்பு – நாளங்களெல்லாம் புடைத்துப் பருத்து விடுகின்றன! அப்பொழுது நிதானமிழந்து போகிறான்! என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பது கூட அவனுக்குத் தெரிவதில்லை!
இதனால்தான் ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை பகருங்கள் என்றபொழுது நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். அவர் மீண்டும் எனக்கு அறிவுரை பகருங்கள் என்றார். அதற்கும் நபியவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். மூன்றாவது தடவையும் அந்த மனிதர் எனக்கு அறிவுரை பகருங்கள் என்றபொழுதும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றே சொன்னார்கள்! (நூல்: புகாரி)
சண்டை – தகராறு என்று வரும்பொழுது மக்களை கீழே வீழ்த்தி விடுபவன் வீரன் அல்லன் என்று இங்கே விளக்கப்படுகிறது. ஆனால் வீரன் – பலசாலி என்று மக்கள் புகழ்வதோ அந்த மனிதனைத்தான்! உண்மையில் வீரன் யாரென்றால், கோபத்தின்பொழுது தன் மனத்துடன் போராடி கோபத்தை அடக்குகிறானே அவன்தான்! உண்மையில் அதுதான் வீரச்செயல்! அதுதான் பாரதூரமான – கஷ்டமான காரியம்! எல்லோராலும் அது முடியாது. மனத்தை வென்றடக்கி அதன் தீய தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளானே அவனால்தான் அது முடியும்! அப்படிப்பட்ட மனிதனைத் தான் வீரன் என்று புகழவேண்டும் என நபியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்!
இந்த வகையில் கோபத்தை அடக்கவும் மனத்தைக் கட்டுப்படுத்தவும் இந்நபிமொழி ஆர்வமூட்டுகிறது. மனத்தைக் கட்டுப்படுத்தாமல் அதன் தீய தூண்டுதல்களின் பின்னால் சென்றுகொண்டிருந்தால் பேரிழப்புதான் ஏற்படும். பிற்பாடு மனம் வருந்தும் நிலைதான் வரும்!
இதனை அன்றாடம் நாம் காணலாம். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுவார்கள். மிகச்சாதாரண விஷயத்திலும் ஆத்திரம் கொண்டு அவசரப்பட்டு மனைவியைக்கூட மணவிலக்கு சொல்லி விடுகிறார்கள்! அது மணவிலக்கின் கடைசித் தவணையாக இருக்கும்! அதனால் கணவனும் மனைவியும் நிரந்தரமாகப் பிரிய வேண்டியதாகி விடுகிறது! பிறகு ஐயோ! அறியாத்தனமாக மணவிலக்கு செய்து விட்டேனே என்று புலம்பிக்கொண்டு திரிகிறார்கள்!
இன்னும் சிலர் கோபத்தின் வேகத்தை தன் மகன் மீது அல்லது மனைவி மீது காட்டுவார்கள். கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கி விடுவார்கள்! அதனால் சிலபொழுது முரட்டுத்தனமான அந்த அடிகளைத் தாங்கமுடியாமல் அவர்கள் இறந்தே போய்விடுகிறர்கள்! வேறு சிலர் உணர்ச்சி வசப்பட்டு தமது உடமைகளையே அழித்து விடுகிறார்கள்! ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டம் என்று சொல்வார்களே அதுபோல இவ்வாறு பற்பல நிகழ்ச்சிகளை நாம் காண்கிறோம். அல்லது கேள்விப்படுகிறோம்!
இதனால்தான் கோபம் உள்ள நேரத்தில் தீர்ப்பு வழங்கக்கூடாது என்று நீதிபதியைக்கூட தடுத்துள்ளார்கள் நீதி நபி(ஸல்) அவர்கள். (நூல்: புகாரி) ஏனெனில் பிரச்னை குறித்து ஆழமாகச் சிந்திக்க விடாமல் கோபம் அவரைத் தடுத்து விடுகிறது! அப்பிரச்னையில் ஷரீஅத் அளிக்கும் தீர்ப்பு என்ன என்று ஒப்பு நோக்கி ஆராய்வதற்கு ஆத்திரம் அவரை விடுவதில்லை! எனவே கோபத்துடன் தீர்ப்பு அளித்து அது அசத்தியத்தின்படி அமைந்து அதனால் அவர் அழிவுக்குள்ளாகி விடலாம்!
இத்தகைய கோபத்தை அடக்கிட வேண்டும். அதற்கான வழியைத்தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள். அதுதான்: அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது! ஆம்! முன்னர் சொன்னது போன்று – கோபத்தின் பொழுது மனத்தில் தீயை மூட்டுவது ஷைத்தான்தான்! எனவே அவனது பகைமையை நினைவில் கொண்டுவந்து – அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினால் மனம் அமைதிப்படும் என்பது திண்ணம்!
அறிவிப்பாளர் அறிமுகம் – ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அவர்கள்
ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அவர்கள் இறைமார்க்கப் பற்றும் பயபக்தியும் மிக்கவராக இருந்தார்கள். தமது குலத்தாரிடையே உயர் அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. பத்று யுத்தத்தில் கலந்துகொண்ட அன்னார் கொலை செய்யப்பட்டார்கள். அப்பொழுது அவர்களது வயது 93 ஆகும். அன்னாரிடம் இருந்து 15 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!
நன்றி.இஸ்லாம்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக