விலைவாசி உயர்வு இந்த நாட்டை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை, தாங்கும் சக்தியை கேள்விக்குரியதாக்கி கேலிக்குரியதாக்கி வாழ்க்கைத் தரத்தை படு பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் இன்று மக்கள் அல்லாடும் நிலை தொடர்கிறது.
காய்கறி விலையேற்றம் விண்ணை முட்டுகிறது. வெங்காயம் தக்காளி போன்றவற்றின் விண்ணேறிய விலையேற்றத்தினால் மக்கள் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியரின் சம்பள உயர்வு அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் வீட்டுவாடகை உயர்வதைப்போல பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி, லாரி அதிபர்கள் வாடகையை உயர்த்தியுள்ளனர்.
வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடைவிதித்தவுடன் அதே வியாபாரிகள் இப்போது வெங்காயத்தை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டார்கள். முதல்கட்டமாக 13 டிரக்குகளில் சுமார் 1,000 டன்னுக்கும் அதிகமான வெங்காயம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு - குறிப்பாக தில்லிக்கு - வந்து சேர்ந்தது. சுங்கவரி உள்பட இந்த வெங்காயத்தின் அடக்கவிலை கிலோ ரூ.18 மட்டுமே என்று சொல்லப்படுகிறது.
ஆகவே, மீண்டும் கிலோ ரூ.30க்கு தில்லி காய்கறிச் சந்தையில் வெங்காயம் கிடைப்பது திண்ணம். நம்முடைய கேள்வி இதுதான். - பாகிஸ்தானில் இவ்வளவு மலிவான விலையில் வெங்காயம் கிடைக்கும் என்றால், அதை ஏன் முன்னதாகவே இறக்குமதி செய்து, சந்தையில் வெங்காயத்தின் விலை உயராமல் இருக்கும்படி அரசு செய்திருக்கக் கூடாது? மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கும் என்றால் இதைத்தானே அரசு செய்திருக்க வேண்டும்.
இதையும் வியாபாரிகள் தான் தங்கள் லாபத்துக்காகச் செய்ய வேண்டுமா? அரசு ஏன் இதில் முனைப்புக் காட்டியிருக்கக் கூடாது? வெங்காயத்தில் இப்படியான நிலைப்பாடு என்றால், சர்க்கரையில் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அல்லவா இந்திய அரசு எடுக்கிறதுமுக்கிய காலங்களில் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்காதீர்கள்.
உள்நாட்டில் சர்க்கரை விலை உயரும் என்று எல்லோரும் சொல்லியாகிவிட்டது. ஆனால், செப்டம்பரில் 2.5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேட்டால், இந்தியாவில் நடப்பாண்டு 25 மில்லியன் டன் உற்பத்தி சர்க்கரை கிடைக்கும். மேலும் கடந்த ஆண்டு இருப்பு 50 லட்சம் டன். ஆகையால் இந்த ஏற்றுமதியால் விலை உயராது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
ஆனாலும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.35 வரை உயர்ந்தது.இப்போதும்கூட 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். நாட்டு மக்களின் உண்மையான தேவைகள் என்ன என்பதை அறியாமல் நாட்டின் நிர்வாகத்தை நகர்த்தும் அதி புத்திசாலிகளை என்ன வென்று சொல்வது ?
ஒரு ரூபாய் அரிசியை வைத்து இருபத்தி ஐந்து ரூபாய் தண்ணீர் இல்லாமல்சமைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதில் காயாவது கறியாவது வாழ்வாவது ஒன்றாவது என அப்பாவி மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். ஆளும் அரசுகளோ கோடிகளைக் குவிப்பதிலே மூழ்கியுள்ளன. மக்களின் கண்ணீர் மட்டுமே இங்கு மலிவு விலைப் பொருளாக மாறிவிட்டது.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொத்தது என்பதை இவர்கள் புரியாவிட்டால் மக்களின் ஆத்திர அலைகளே இவர்களை தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி.தமுமுக.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக