
சிரியாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி பஷர் அல் அசாத் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம், ஓராண்டை கடந்த போதிலும் இன்னமும் அவர் பதவி விலக மறுத்து வருகிறார்.
போராட்டக்காரர்களை இராணுவம் கொன்று வருகிறது. இதனால் ஏற்படும் கலவரங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா சபை முன்னாள் செயலாளர் கோபி அன்னன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி வரும் 10ம் திகதி முதல் போர் நிறுத்தம் செய்வதென போராட்டக்காரர்களும், சிரியா அரசும் ஒப்புக் கொண்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என சிரியா அரசு நிபந்தனை விதித்துள்ளது. இதுவரை உறுதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் சிரியா வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோபி அன்னன் உறுதி அளித்தபடி, ஆயுதங்களை கீழே போடுவோம் என போராட்டக்காரர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்காதவரை இராணுவத்தை வாபஸ் பெற முடியாது.
மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் போராட்டக்காரர்களுக்கு எவ்வித உதவியும் வழங்க மாட்டோம் என்றும் உறுதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருதரப்பினரும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைக்க வேண்டுமென்று கோபி அன்னன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக