காட்டுமன்னார்கோவில் அருகே லட்சுமிகுடியை சேர்ந்தவர் புதுராஜன் (வயது 72). பா.ம.க. பிரமுகரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மற்றும் அவரது கணவர் எல்.ஆர். விசுவநாதனுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் புதுராஜன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்து போது எல்.ஆர். விசுவநாதன் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் புதுராஜனை அரிவாளால் வெட்டியது.
ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சூலாயுதத்தால் புதுராஜனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புதுராஜன் அதே இடத்தில் இறந்து போனார். மேலும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் புதுராஜன் உடலை அருகில் உள்ள குளக்கரையில் இழுத்து போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த கொலை குறித்து புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சிமன்ற தலைவர் கலைவாணி, அவரது கணவர் எல்.ஆர்.விசுவநாதன், உள்பட 3 பேர் கொண்ட கும்பலை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் (33), ஊசி என்ற சவுந்தரராஜன் (39), கார்த்திகேயன் (27), கங்கை அமரன் (24) ஆகிய 4 பேரையும் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நேற்று இரவு கைது செய்தார்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவி கலைவாணி, அவரது கணவர் எல்.ஆர்.விசுவநாதன் உள்பட 5 பேரையும் தேடிவருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக