ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
27 ஜூலை, 2012
கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!
ஹாஜியா S.சான் பேகம்
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.
- நன்றி; சமரசம்
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.
இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?
நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்களே, அது ஏன்? ஈகைப் பெருநாளைக்கு ரமளான் மாதத்தில்தான் கடைக்குச் சென்று துணிமணிகள் வாங்க வேண்டுமா? பெருநாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்பாகவே துணிமணிகள் வாங்கி விடலாமே. கடைசி நேரத்தில் தான் மக்களைக் கவர பெருநாள் ஸ்பெஷல்னு புதுவகைகள் வரும் என்று சொல்லுகிறார்கள். புதுவகை துணிகள் போடுவதால் அதிக நன்மைகள் கிடைக்குமா?
புனித ரமளானில் தொழுது, ஓதி, துஆ கேட்பதால் அதிக நன்மைகள் கிடைக்குமா? யோசியுங்கள்!
காலை 10 - 12க்கு மின்தடை. 9.50க்குள் மிக்ஸியில் அரைக்க வேண்டிய எல்லாவற்றையும் அரைத்து ரெடி பண்ணிக் கொள்ள தவறுகிறோமா? இல்லையே! இங்கே மட்டும் நம் தேவையை முன்கூட்டியே செய்துகொள்ளும் நாம் ரமளானின் சிறப்புகள் தெரிந்தும், ரமளானுக்குரிய தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்வதில்லையே, அது ஏன்?
ரமளான் கண்ணியத்துக்குரிய மகத்தான மாதம். அருள்வளங்கள் பொழியும் மாதம். ரமளானில் செய்யப்படும் ஒரு நற்செயல், ரமளான் அல்லாத பிற மாதங்களில் நிறைவேற்றப்படும் ஒரு பர்ளுக்கு (கட்டாய வழிபாட்டிற்கு) சமமாகிறது. ரமளானில் செய்யப்படும் ஒரு பர்ளு, ஏனைய மாதங்களில் செய்யப்படும் எழுபது பர்ளுக்கு சமமாகிறது.
இது பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சொர்க்கம் ஆகும். இந்த மாதத்தில் இறை நம்பிக்கையாளனின் வாழ்வாதாரம் அதிகரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் :
1. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமாவை அதிகமதிகம் ஓதுவது.
2. குர்ஆனுடன் அதிக தொடர்பு.
3. அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பது.
4. அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பது.
5. நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு வேண்டுவது.
“நற்செயல்கள் அனைத்திற்கும் வானவர்களின் மூலம் பிரதிபலனை வழங்குகிறேன். ஆனால் நோன்பு எனக்காகவே நோற்கப்படுவதால் அதன் கூலியை நானே வழங்குகிறேன்” என்கிறான் அல்லாஹ்.
அல்லாஹ்வே நேரிடையாகத் தரும் கூலியைப் பெற நாம் ஆயத்தமாக வேண்டாமா? சொர்க்கம் அலங்கரிக்கப்படுவதும் இந்த மாதத்தில்தான். ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதும் இந்த மாதத்தில்தான்.
ரமளானில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு அதிகமான நன்மைகளும் அருள்வளங்களும் பொருந்திய இரவு - அதுதான் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது. ரமளானில் சில முஸ்லிம்கள் பின்பற்றும் மிகவும் அசிங்கமான, அருவருக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் -
நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்கு முன்பாக அல்லாஹ்விடம் கையேந்தி விசேஷமாக துஆ கேட்பதிலும், பாவமன்னிப்பு கேட்பதிலும் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தில் கேட்கப்படும் இறைஞ்சுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான். அத்தகைய அருமையான நேரத்தில் இஸ்லாமியப் பெண்மணிகள் ஜவுளிக் கடைகளுக்குச் செல்லுகிறார்கள்; கடைக்காரர்கள் தருவதைக் கொண்டு இஃப்தார் முடித்துக் கொண்டு ஜவுளியும் வாங்கி வந்து விடலாம் என்ற திருப்தியுடன். இஃப்தாருக்காக வாடிக்கையாளர்களைக் கவருவதற்குக் கடைக்குக் கடை போட்டி போட்டுக் கொண்டு அதிகமான தின்பண்டங்களும் குளிர் பானங்களும் தரப்படுவதால், இதனால் கவரப்பட்டு பெண்கள் நோன்பு துறக்கும் அந்த மக்ரிப் நேரத்தில் கடைக்குப் போவதை வாடிக்கையாகக் கொள்கிறார்கள். கடைக்காரர்கள் தொழவும் இடவசதி செய்து தருகிறார்கள்.
அதிலும் சிலர் நேற்று அந்தக் கடையில் இஃப்தாருக்கு இதெல்லாம் தந்தான், நீ போன கடையில் என்ன தந்தான் என்று கேட்டு அதிகமாக தரும் கடைகளுக்குச் சென்று ஜாலியாக நோன்பைத் திறந்துவிட்டு வருவதும் உண்டு. இதில் இன்னுமொரு கொடுமையும் நடக்கிறது. நோன்பு இல்லாத முஸ்லிம்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இஃப்தார் நேரத்தில் சும்மாவேனும் சாப்பிட்டு விட்டு வருவதும் உண்டு. இவர்கள் செய்யும் இந்த அற்ப காரியங்களால் எவ்வளவு பெரிய பாவமூட்டையை மறுமையில் சுமக்கத் தயார் ஆகிறார்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை. இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நம் நன்மைகளைக் குறைத்துக் கொள்ளாமல், வரவிருக்கும் ரமளானை எதிர்நோக்கி, உள்ளச்சத்தோடு உண்மையானவர்களாக, நோன்பை நோற்று, ஏனைய வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு இறைவனின் அருளை, அவன் வாரி வழங்க உள்ள நன்மைகளை முழுமையாகப் பெறுவோம் என்ற சங்கல்பத்துடன் ரமளானை வரவேற்கத் தயாராவோம்.
நோன்பு ஒரு கேடயம்
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி” என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)
நோன்பாளிகளின் சிறப்பு
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
(ஸஹ்ல் (ரலி) புகாரி)
சுவர்க்கம் திறக்கப்பட்டு, நரகம் மூடப்படுகிறது ரமளான் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)
நோன்பாளியின் மகிழ்ச்சி
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக