அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 ஜூலை, 2012
ஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..?
இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் ‘ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்’ என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் ‘ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்’ என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் ‘கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்’ என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.
ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லிக் கொண்டு மேற்கொண்டு உள்ளே நுழைவோம்.
மறுப்பாளர்
1 – ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு வலுவான ஆதாதரங்கள் எதுவுமில்லை. இப்படி இருக்கும் போது ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி புரிந்துக் கொள்வது? தினமும் ஐந்து வேளை தொழுங்கள் என்று கட்டளையுள்ளது. வாழ்நாளில் ஒரு முறை மட்டும் தான் ஹஜ் கடமை என்று கட்டளையுள்ளது. ரமளான் மாதத்தில் நோன்பு வையுங்கள் என்று கட்டளையுள்ளதால் ஆண்டு தோறும் ரமளானில் நோன்பு வைக்கிறோம். காலம் குறிப்பிடாமல் பொதுவாக ஒரு காரியத்தை குறிப்பிடும் போது அது ஒரு முறை மட்டும் தான் என்று பொருள்படும். ஜகாத்தும் அது போன்றுதான். காலம் எதுவும் குறிப்பிடாமல் பொதுவாக ஜகாத் கொடுங்கள் என்று வந்துள்ளதால் ஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும்.
நாம்.
ஒரு கட்டளை காலாகாலமாக எப்படி புரிந்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை ஆய்வு செய்யாமல் வெறும் உதாரணங்கள் மூலம் தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் நோன்பு வைக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள், ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள் ‘ஹஜ்ஜையும்’ அப்படித்தான் புரிந்துக் கொள்ள வேண்டுமா.. என்ற சந்தேகத்தில் தான் நபி(ஸல்) அவர்களிடம் ‘ஆண்டுதோறும் ஹஜ்ஜா’ என்று கேள்வி கேட்கிறார்கள். நபி(ஸல்) ஹஜ் மற்றதை போன்றதல்ல. அது ஒருமுறைதான் என்று விளக்கி விடுகிறார்கள்.
அன்றைய மக்களிடம் இருந்த ஒரு பழக்கம் மாற்றப்படும் போது அது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு விடும். தெளிவாக சுட்டிக்காட்டப்படாத ஒன்று அன்றைய நடைமுறையில் எப்படி இருந்ததோ அதை தழுவியதாகவே அங்கிகரிக்கப்பட்டு விட்டது என்று பொருள். பால்யவிவாகம் ஆரம்பத்தில் அங்கீகரித்து மாற்றப்பட்டது – பலதாரமணம் அங்கீகரித்து பின்னர் வரையறை விதிக்கப்பட்டது போன்றவற்றை இதற்கு உதாரணமாக்கலாம். ‘திருமணத்தை உறுதியான உடன்படிக்கை’ என்று சொல்லப்படவில்லை என்றால் இன்றைக்கும் பால்ய விவாகம் கூடும் என்றுதான் நாம் விளங்கி இருப்போம். ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு இல்லாதவரை அந்த மக்கள் எப்படி புரிந்துக் கொண்டார்களோ அதுவே நிலைப் பெற்றுள்ளது என்பதுதான் அதன் பொருள். (அந்த மக்கள் அப்படித்தான் விளங்கி இருந்தார்களா என்பதை கடைசியில் விளக்குவோம்)
மறுப்பாளர்.
2 – ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதால் தான் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்காமல் இருந்து விட்டோம். பாவத்துடன் பாவம் வந்து சேரட்டும் என்று இருந்து விடுகிறார்கள். ‘ஒரு முறைக் கொடுத்தால் போதும்’ என்று சொல்லிப் பாருங்கள். ஒரு முறைத்தானே கொடுத்து விடலாம் என்று கொடுக்கத்துவங்கி விடுவார்கள். (முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் தர்க்க ரீதியாக எடுத்து வைக்கப்பட்ட வாதம் இது)
நாம்.
ஒரு தெளிவான ஆதாரத்தை மேலும் விளக்க – புரிய வைக்க தர்க்க ரீதியான வாதங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால்,
தெளிவான ஆதாரம் முன் வைக்கப்படாத ஒரு கட்டளையை விளக்ககுவதற்கு இத்தகைய தர்க்க வாதங்களை முதன்மைப்படுத்தவும் கூடாது. ஒரு வாதமாக வைக்கவும் கூடாது. ஏனெனில் ஆதாரத்தை விட ருசியான தர்க்க வாதங்களை ரசிப்பவர்கள் அதையே பின்பற்றும் நிலை உருவானால் அதன் கெடுதி (குறிப்பாக ஜகாத் விஷயத்தில்) பல பணக்காரர்களையும் கெடுக்கும், அவர்களால் பயன்பெறும் பல ஏழைகளையும் பாழ்படுத்தி விடும்.
இறைக் கட்டளைகள் என்பது இறைநம்பிக்கையாளனுக்கு உரியதாகும். ஒரு இறை நம்பிக்கையாளன் தான் கொண்ட இறை நம்பிக்கையில் எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறான் என்பதை பொருத்தே அவனது அடிபணிதல் அமையும். வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை – மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் (அதுதான் சட்டம்) என்றாலும் ஆழமான இறை நம்பிக்கைக் கொண்டவன் அதை செயல்படுத்தியே தீருவான். ஏனெனில் இங்கு குறுகிய காலகட்டம், குறைந்துப் போகும் பொருளாதாரம் என்ற சிந்தனையெல்லாம் அவனுக்கு எட்டுவதற்கு பதிலாக ‘இது இறைவனின் கட்டளை’ என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி நிற்கும்.
ஐந்து வேளை தொழுகை என்பது கூட (குறிப்பாக இன்றைய அவசர உலகில்) பலருக்கு சுமைதான். ஆனாலும் தவறாமல் தொழுகிறார்கள் என்றால் அவசர உலகம் – நேரமின்மை என்பதையெல்லாம் விட இது இறைக் கட்டளை என்ற எண்ணமே மற்ற எல்லாவற்றையும் மறுபுறம் ஒதுக்கித் தள்ளுகிறது.
நாத்திகர்கள் சரிகாணும் ஒரு வாதத்தை இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் முன்மொழியப்படுகிறது.
ஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும் என்று தீர்ப்பளித்து விட்டால் மட்டும் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடுவார்களா..? அதற்கு யாராவது உத்திவாதம் கொடுக்க முடியுமா?
ஆண்டுதோரும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத் கொடுக்காமல் பின்வாங்கி விடுவார்களா.. அதையாவது இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா..
இறை நம்பிக்கையை வலுபடுத்த பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் ‘ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால் தான் நிறைய பேர் ஜகாத் கொடுப்பதில்லை’ என்று பேசுவது வேதனையான ஒன்றாகும்.
மறுப்பாளர்.
3 – ஜகாத் கொடுப்பதன் மூலம் ஏழ்மையை குறைப்பது – வறுமையைப் போக்குவது – கடனிலிருந்து விடுபட செய்வதுதான். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது மூலம் ஜகாத் கொடுப்பவனையே ஒரு நேரத்தில் இவர்கள் ஜகாத் வாங்க வைத்து விடுவார்கள். கொடுத்தவற்றிற்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதன் மூலம் அவன் பொருளாதாரம் கரைய துவங்கி கடைசியில் ஒன்றுமில்லாமல் அவன் பிறரிடம் ஜகாத்தை எதிர்பார்க்கும் சூழ்நிலைத்தான் உருவாகும். (இதே கருத்து இன்னும் விரிவாக… முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் தர்க்க ரீதியாக எடுத்து வைக்கப்படும் வாதங்களில் இதுவும் ஒன்று)
நாம்
இறைவனின் பாதையில் செலவு செய்வதால் செல்வம் குறைந்து வறுமை உண்டாகும் என்பது ஷெய்த்தான் எடுத்து வைத்து பயமுறுத்தும் வாதமாகும்.
ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை பயமுறுத்துகிறான். வெட்கக் கேடான செயல்களை செய்யும் படி ஏவுகிறான். (அல் குர்ஆன் 2: 268)
இறைவனின் பாதையில் செலவு செய்வதால் அதன் விளைவு எப்படி இருக்கும்? இறைவன் உதாரணத்துடன் விளக்குகிறான்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல் குர்ஆன் 2:261)
இறைவனின் பாதையில் தங்கள் செல்வங்களை செலவு செய்த எந்த ஒரு நபித்தோழரும் ‘இதனால் எங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டது’ என்ற வாதத்தை எடுத்து வைக்கவில்லை
ஏன் அவ்வளவு போவானேன்,
ஏகத்துவ பிரச்சாரம் என்று துவங்கி பின்னர் சமுதாய பணி என்று பல இயக்கம் கண்டவர்கள் வசூல் வசூல் என்று இன்றைக்கும் வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். வருட வசூல் என்று கூட இல்லாமல் தேவைக்கேற்ப தினமும் கூட வசூல் செய்திருக்கிறார்கள். செல்வந்தர்கள் மட்டுமின்றி தின வருமானத்தைப் எதிர்பார்த்து வாழ்ந்தவர்கள் கூட நற்பணிகளுக்கென்று நிறைய கொடுத்துள்ளார்கள். இறைப்பணிக்காக செலவிட்ட இவர்களில் யாராவது கடனாளியாக – ஓட்டாண்டியாக ஆகி விட்டார்கள் என்று இவர்களால் சொல்ல முடியுமா..
வருடந்தோறும் இறைவன் பாதையில் செலவு செய்வதால் வறுமை வரும், கடனாளியாக வேண்டி வரும் என்று ஒரு நல்லறிஞர் சொல்வதை எந்த கோணத்தில் புரிந்துக் கொள்வதென்றே தெரியவில்லை.
மறுப்பாளர்.
4 – ‘எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு’ (அல் குர்ஆன் 9:34) என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவர்கள் ்உங்கள் சிரமத்தை நான் நீக்குகிறேன்’ என்று கூறி விட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பாரமாகத் தெரிகிறது’ என்றுக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப்படுத்தவதற்கே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை’ என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் 1417)
எஞ்சிய பொருளைத் தூய்மைப்படுத்துவற்காகவே ஜகாத் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும் என்ற நம் கூற்றை வலுப்படுத்துகிறது.
இது தொடர்பு அறுந்த ஹதீஸ் என்று சிலர் மறுக்கிறார்கள். ஆனால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்கள் 1) நூலாசிரியர் 2) உஸ்மான் பின் அபீஷைபா 3)யஹ்யா 4)யஃலா 5) கைலான் 6) ஜஃபர் பின் இயாஸ் 7) முஜாஹித்) இப்னுஅப்பாஸ் 9) உமர்(ரலி) 10) நபி(ஸல்)
இந்த அறிவிப்பாளர் தொடரில் கைலான் என்பவரும் ஜஃபர் பின் இயாஸ் என்பவரும் வருகிறார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இதை சிலர் மறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தித்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கைலான் ஹஜ்ரி 132ல் மரணிக்கிறார், ஜஃபர் ஹிஜ்ரி 126ல் மரணிக்கிறார் (தர்கீபுத் தஹ்தீபு 1-139)
நாம்.
பொருளைத் தூய்மைப்படுத்துவதற்கே ஜகாத் – அதனால் ஒரு முறை கொடுத்துவிட்டால் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்பதை நிலைநாட்ட இந்த ஹதீஸை பலப்படுத்தியுள்ளார்கள். ஹதீஸ்கலையை நன்கு விளங்கிய நிலையில் தான் இந்த வாதம் எடுத்துவைக்கப்பட்டுள்ளது.
தகுந்த காரணங்களின்றி பலவீனம் என்று சொல்லப்படக் கூடிய ஹதீஸ்கள் பலவீனமுமாகாது. சந்தேகம் எழுப்பப்படும் செய்திகளை தெளிவாக உறுதிப்படுத்தாத வரை அது பலமுமாகாது. கைலான் என்பவரும் ஜஃபர் பின் இயாஸ் என்பவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இந்த செய்தி பலவீனமாகும் என்பது ஒரு சாராரின் வாதம். இருவரும் சந்தித்துள்ளார்கள் என்று யாராவது கூறினால் அதற்குரிய முறைான சான்றை எடுத்துக் காட்டுவது அவர்களின் பொறுப்பாகும்.
மறுப்பாளர்கள் எடுத்துக் காட்டிய சான்று என்னவென்றால் ‘இருவரும் சமகாலத்தில் – கூபாவில பஸராவில் (அருகருகே உள்ள ஊர்களில்) வாழ்ந்தவர்கள்’ என்பதேயாகும். அறிவிப்பாளர்களின் சந்திப்பை பலப்படுத்த இது போதிய ஆதாரமல்ல என்பதை புரியாதவர்களல்ல இவர்கள். ‘இன்னார் இந்த செய்தியை அறிவித்தார்’ என்பதற்கும் ‘இன்னார் இந்த செய்தியை “எனக்கு” அறிவித்தார் என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. “எனக்கு” என்று சொல்லும் போதுதான் அது “இருவரும் சந்தித்துள்ளார்கள்” என்பதற்கு சான்றாக அமையும். ஹதீஸ் கலையை ஆழமாக கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். மேற்கண்ட செய்தியில் இருவரும் கூபாவில் வாழ்ந்திருந்தாலும் ‘எனக்கு அறிவித்தார்” என்று அவர் சொல்லவில்லை. நேரடியாக கேட்காமல் ‘அவர் அறிவித்தார்’ என்று வரும் போது யாரிடம் அறிவித்தாரோ அந்த நபர் இடையில் விடுபட்டுள்ளார். அவர் யார் என்று தெரியாத வரை இந்த செய்தியை ஆதாரமாக எடுக்க முடியாது.
விடுபட்டுள்ள அவர் யார்?
உஸ்மான் பின் கத்தான் என்பவர் தான் அவர். மேற்கண்ட கைலான் ஜஃபர் பின் இயாஸ் இருவருக்கும் மத்தியில் இடம் பெறுகிறார். இந்த உஸ்மான் பின் கத்தான் என்பவர் இணைந்து அறிவிக்கும் இதே செய்தி ஹாக்கிமில் வருகிறது. ஆனால் உஸ்மான் பின் கத்தான் என்பவர் ‘பலவீனமானவர்’ என்பதால் அந்த செய்தி பலவீனப்பட்டு விடுகிறது. அவர்கள் எடுத்துக் காட்டும் ‘பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்” என்ற அபூதாவூதுடைய செய்தியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டுள்ளதால் இதுவும் தொடர்பறுந்த பலவீனமான செய்திதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உஸ்மான் பின் கத்தான் இடம்பெறாமல் மேற்கண்ட இருவரும் சந்தித்துள்ளார்கள் என்பதற்கு இவர்களால் ஆதாரம் கொடுக்க முடியாது என்பது தான் உண்மை.
முஸ்லிம் ஹதீஸ் கிரதத்தின் முன்னுரையில் ‘இரண்டு அறிவிப்பாளர்கள் சமகாலத்தில் வாழ்ந்து சந்திக்கக் கூடிய அளவிற்கு அருகில் வாழ்ந்திருந்தால் அதுவே அவர்கள் சந்திப்பை உறுதிப்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்கள். இது உண்மைதான். இது எப்போது உண்மைப்படும் என்றால் இரண்டு அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் வேறு அறிவிப்பாளர் இடம் பெறாமல் ஒரு செய்தி பல வழிகளில் (பல நூல்களில்) இடம் பெற்றால் மட்டும் தான் முஸ்லிம் இமாமுடைய கூற்றுப்படி அதை எடுத்துக் கொள்ள முடியும். இரண்டு அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் வேறொரு அறிவிப்பாளர் ஒரு செய்தியில் இடம் பெற்று மற்றொரு செய்தியில் அவர் விடுபட்டிருந்தால் இதுபோன்ற இடங்களை பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் இமாம் தன் கருத்தை வைக்கவில்லை. எனவே ‘பொருளை தூய்மைப்படுத்தத்தான் ஜகாத் என்ற அபூதாவூதில் இடம் பெறும் செய்தி தொடர்பு அறுந்ததுதான்.
மேலும் நாம்,
எந்த ஒரு பொருளும் தூய்மையோ அசுத்தமோ அடைய வாய்ப்பேயில்லை. பொருள்கள் வரும் வழியைப் பொருத்து அதற்குரிய மனிதர்கள்தான் தூய்மையோ அசுத்தமோ அடைகிறார்கள்..
ஒருவன் உழைத்து 100 ரூபாய் சம்பாதிக்கிறான் மற்றொருவன் திருடி அல்லது லஞ்சம் வாங்கி 100 ரூபாய் சம்பாதிக்கிறான் என்றால் இருவரின் கைகளில் 100 ரூபாய்கள் இருக்கும் நிலையில் ஒருவன் நல்லவனாகவும் அடுத்தவன் கெட்டவனாகவும் காட்சியளிப்பான். பொருள்கள் வரும் வழியைப் பொருத்து மனிதர்கள் தான் தூய்மையோ அசுத்தமோ அடைகிறார்களே தவிர பொருளுக்கென்று எந்த தூய்மையோ அசுத்தமோ கிடையாது.
இஸ்லாத்தின் கடமைகள் அனைத்தும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தத்தானே தவிர வேறொன்றுக்கும் இல்லை. தொழுகைப் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஹதீஸ்களில் ‘தொழுவதன் மூலம் உங்கள் பாவங்கள் குறைகின்றன’ என்ற கருத்தே வந்துள்ளன. ஒரு வக்தின் தொழுகையை தொழுதவர் மறு வக்து தொழுகையை தொழுதால் இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். ஒரு ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் மத்தியில் ஏற்பட்ட சிறுபாவங்கள் மன்னிக்கப்படும்.
ரமளானில் நோன்பு நோற்பவர் தூய்மையாவார் (அல் குர்ஆன்)
தீய எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் ஹஜ் செய்தவர் அன்று பிறந்த குழந்தையைப் போலாகி விடுவார் (புகாரி – முஸ்லிம்)
இப்படி வணக்கங்கள் அனைத்தும் மனிதர்களை (முஸ்லிம்களை) தூய்மைப்படுத்தவே என்பது போன்றே ஜகாத் கடமையும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தவே என்று இறைவன் கூறுகிறான்.
(நபியே) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை தூய்மைப் படுத்தி பரிசுத்தமாக்குவீராக. (அல் குர்ஆன் 9:103)
ஜகாத் கொடுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தூய்மையும் அடைய வேண்டும். இன்னும் கூடுதலாக பரிசுத்தமாக வேண்டும் என்று மிக அழுத்தமாக இறைவன் கூறியிருக்கும் போது இதற்கு மாற்றமாக ‘பொருள் தூய்மைக்கு தான் ஜகாத்’ என்று வாதிக்கும் துணிவு எங்கிருந்துதான் வந்ததோ….
தமீம் குலத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வமும், பெரிய குடும்பமும், பெரும் சொத்துக்களும் இருக்கின்றன. நான் என் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என் செல்வத்தை எப்படி செலவு செய்வது என்று எனக்கு அறிவியுங்கள் என்றார். அதற்கு இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உமது செல்வத்திலிருந்து ஜகாத்தை கொடுங்கள் ஜகாத் தூய்மைப்படுத்தும் என்பதால் அது உம்மைத் தூய்மைப்படுத்தும். (அனஸ் பின் மாலிக்(ரலி) அஹ்மத் 11945)
விளக்கமா… முரணா…
(புகாரி)1404. காலித் இப்னு அஸ்லம் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒருகிராமவாசி, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்கள்… என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ‘ஸகாத்தை’ அல்லாஹ் ஆக்கிவிட்டான்’ என்றனர்.
இந்த செய்தியை எடுத்துக் காட்டி குர்ஆன் வசனத்தைப் பின்னுக்குத் தள்ளி பொருள் தூய்மைக்கே ஜகாத் என்று எழுதியுள்ளார்கள். பிறகு தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக ஜகாத் பெற்று மனிதர்களைத் தூய்மைப்படுத்தும்’ என்ற வசனத்தை எடுத்துக் காட்டி ஊசி புதிய ஆடையையும் கந்தல் ஆடையையும் தைக்கும் என்றெல்லாம் எழுதியுள்ளார்கள்.
ஸகாத் மனிதர்களையும் – பொருளையும் தூய்மைப்படுத்தும் என்பதுதான் அவர்களின் வாதம் என்றால் (இதை அவர்கள் அழுத்தமாகச் சொல்லவில்லை. பொருளைத்தான் தூய்மைப்படுத்தும் என்பதையே அழுத்தமாக சொல்லி வருகிறார்கள்) இதில் வரும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை அவர்கள் எப்படித்தான் விளக்குவார்கள்?
நோன்பு முஸ்லிம்களை தூய்மைப்படுத்துகிறது. ஒருவருடம் வைத்து விட்டு நான் தூய்மையடைந்து விட்டேன் என்று யாரும் முடிவு செய்வதில்லை.
சில தொழுகைகளைத் தொழுது விட்டு நான் தூய்மையடைந்து விட்டேன் என்று தொழுகையிலிருந்து விடுபட்டு விட முடியுமா..?
பொருளுக்கு ஜகாத் கொடுத்து ஒரு முஸ்லிம் தூய்மையாகின்றான் என்று வைத்துக் கொள்வோம். எந்த பொருளுக்கு ஜகாத் கொடுத்தானோ அந்த பொருளை பயன்படுத்துவதன் வழியாக அவனுக்கு எந்த வித அசுத்தமும் வந்து சேராது என்று இவர்களால் துணிந்து சொல்ல முடியுமா..
மறுப்பாளர்.
ஒரு மனிதனுக்கு புதையல் கிடைக்கின்றது அதிலிருந்து 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபி(ஸல்) நிர்ணயித்தார்கள். (புகாரி 1499 – 2355)
போர்காலங்களில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருள்களில் ஐந்தில் ஒரு பங்கை செலுத்தி விட வேண்டும் என்றும் நபி(ஸல்) நிர்ணயித்தார்கள். புகாரி 1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556)
இந்த ஹதீஸ்கள் படி குறிப்பிட்ட சதவிகிதத்தை கொடுத்து விட்டால் போதுமா.. அல்லது ஆண்டு தோறும் கொடுக்க குறிப்பிட்ட சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று விளங்குவார்களா..? (எனவே ஒரு முறை கொடுத்தால் போதும்)
நாம்.
ஒரு மனிதனுக்கு 100 பவுன் தங்கம் புதையலாகக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அதற்கு 20 சதவிகிதம் அவர் ஜகாத் வழங்கி விட்டார். வழங்கிய பிறகு அந்த புதையலின் மதிப்பு அது கிடைத்த போது இருந்ததை விட கிடு கிடு வென்று உயர்ந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இப் போது உயர்ந்த அந்த மதிப்பிற்கு ஜகாத் வழங்க வேண்டுமா.. வேண்டாமா..? கூடிய அதன் மதிப்பிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்ற கருத்தை இவர்கள் முன் வைத்தால் ‘புதையலுக்கு ஜகாத் கொடுத்தாகி விட்டது இனிமேல் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்கிற அவசியமில்லை’ என்று புதையலுக்குரியவன் கூறினால் இவர்கள் என்ன சொல்வார்கள். அல்லது புதையலுக்கு ஜகாத் கொடுத்தாகி விட்டதால் அதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என்று சொல்வார்களா…
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு உயர்ந்தால் உயர்ந்த மதிப்பை கணக்கிட்டு ஜகாத் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் கூறினால் அதற்கு எந்த ஆதாரத்தை சமர்பிப்பார்கள்?
அப்படியானால் புதையல் சொத்தை எப்படி விளங்குவது?
எவ்வித உழைப்பும் இன்றி இனாமாக அந்த சொத்து கிடைப்பதால் கிடைத்தவுடன் 20 சதவிகிதம் அதன் மீது விதிக்கப்பட்டு விடும். பின்னர் அது அவனது சொத்தாகி பிற சொத்துக்களுடன் சேர்ந்து விடுவதால் இதர சொத்துக்கள் மீது இருக்கும் கடமை இதன் மீதும் வந்து விடும் என்று விளங்குவதுதான் சரியாகப்படுகிறது.
இப்படி விளங்கும் போது ஜகாத் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு உயர்வதால் எந்த குறுக்கீடும் வருவதற்கு வழியில்லை.
போரில் கிடைத்தப் பொருள் என்பது இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்பதால் அது பற்றிய விவாதத்திற்குள் நாம் நுழைய வேண்டாம்.
ஆக, மறுப்பாளர்கள் ‘ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும்’ என்ற தங்கள் வாதத்திற்கு இரண்டு ஆதாரங்களை (ஆதாரங்களாக அவர்கள் கருதுபவற்றை) எடுத்து வைத்துள்ளார்கள்.
1) பொருளை தூய்மைப்படுத்தவே ஜகாத்
2) புதையல் பற்றிய ஹதீஸ். இரண்டின் நிலவரத்தையும் நாம் இங்கு விரிவாக அலசியுள்ளோம். மட்டுமின்றி தர்க்க ரீதியாக அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் எவ்வளவு தவறானவை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். இனி தொடர்சியாக கூடுதல் விபரங்களைப் பார்ப்போம்.
நடைமுறைச் சிக்கலான எந்த ஒரு சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்காது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும் – விளங்க வேண்டும். குறிப்பாக கட்டாயக் கடமையாக்கப்பட்டவற்றில் எற்த நடைமுறைச் சிக்கலும் இருக்கக் கூடாது.
ஜகாத் ஒரு முறை வழங்கினால் போதும் என்ற கருத்தில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
ஜகாத் கொடுத்த பொருளின் மதிப்பு உயரும் போது அதை எப்படிக் கையாள்வது? பத்து லட்சம் மதிப்புள்ள ஒரு காலி மனைக்கு ஒருவர் ஜகாத் கொடுத்து விட்டார். அடுத்தக் கட்டங்களில் அதன் மதிப்பு உயர்கிறது. உயர்ந்த மதிப்புக்கு ஜகாத் தேவையில்லை என்று இவர்கள் அறிவித்தால் அப்போது வேறு கேள்விகள் எழும். மதிப்பு உயரும் போது அந்த மதிப்புக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு என்றால் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது?
ஏராளமான சொத்துக்குரியவர்கள் தினமும் தனது சொத்தின் மதிப்பீடு என்னவென்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா.. ஜகாத் கொடுப்பதற்கென்றே ஒவ்வொரு செல்வந்தரும் தனியாக ஒரு குழுவை தம்மிடம் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமா… உயரும் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால்,
‘ஒவ்வொரு நிமிடமும் உயரும் மதிப்புக்கா’
ஒவ்வாரு மணிநேரமும் உயரும் மதிப்புக்கா’
ஒவ்வொரு நாளும் உயரும் மதிப்புக்கா’
ஒவ்வொரு வாரமும் உயரும் மதிப்புக்கா’ (இது அவர்கள் கோணத்தில் வைக்கப்படும் கேள்விகள்)
தங்கத்தின் மதிப்பு மணிக்கு ஏற்றால் போல மாறிக் கொண்டிருக்கிறது. இதை எப்படி அணுகுவார்கள்? தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கும் நிலக்கரி மற்றும் பெட்ரோல் உற்பத்தி போன்றவற்றிற்கு வரும் மேலதிக வருமானத்திற்கு மணிக்கொரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளலாமா..!? பெரும் ஜவுளி உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் இங்கெல்லாம் ஒரு நாளைக்கல்ல ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கில் பணங்கள் வந்துக் குவியும். ஒரே நாளையில் பலமுறை ஜகாத்தின் நிஸாபை கடக்கக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களெல்லாம் (இவர்களின் அளவுகோல் படி) ஜகாத்தை எப்படி கணக்கிடுவது?
பங்கு சந்தையில் மணிக்கொருதரம் மதிப்பீட்டில் வித்தியாசங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அனைவரும் தனது பங்கின் மதிப்பு உயரும் போதெல்லாம் அதற்கு மதிப்புப் போட்டு ஜகாத்தை பிரிக்க வேண்டுமா..?
இதே அடிப்படையில் நூற்றுக் கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களால் முரண்பாடற்ற பதிலை கொடுக்கவே முடியாது.
இனி ஆண்டுதோறும் என்பதின் நிலையைப் பார்ப்போம்.
ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம் என்பது அவர்களின் வாதம். வலுவான சில செய்திகளையும் அவர்கள் பலவீனப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஒரு புறம் நாம் வைத்து விட்டாலும் நாம் அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகள் சில உண்டு
1) ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்ற செய்திகள் பலவீனம் என்றே வைத்துக் கொள்வோம். எதிர் ஆதாரங்கள் இல்லாத நிலையில் இந்த கருத்து சமூகத்தில் எப்படி நிலைப் பெற்றது?
2) ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதற்கு பலவீனமான செய்திகளாவது (அவர்கள் வாதப்படி) ஹதீஸ் நூல்களில் கிடைக்கின்றன. ஒரு பொருளுக்கு ஒரு முறைக்கொடுத்தால் போதும் என்ற ஒரு பலவீனமான செய்தியையாவது இவர்களால் காட்ட முடியுமா..?
3) ஜகாத் என்ற மிக முக்கிய கடமையை நபித் தோழர்கள் காலம் தொட்டு இன்றுவரை தவறாகவே புரிந்து செயல்படுத்தியுள்ளார்கள் என்று சொல்ல வருகிறார்களா..?
4) நபித்தோழர்களின் செயல்பாடுகளை மார்க்க ஆதாரமாக எடுக்கக் கூடாது என்பதில் நாமும் உடன்படுகிறோம். ஆனால் அது எப்போது? நபித்தோழர்களின் கருத்துக்கு மாற்றமாக ஒரு ஆதாரம் கிடைக்கும் போதுதான் நபித்தோழர்களின் கருத்தை விட ஆதாரமே முக்கியம் என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஜகாத் விஷயத்தில் நபித்தோழர்களின் கருத்தை பின்பற்றக் கூடாது என்றால் அவர்களின் கருத்துக்கு எதிரான ஆதாரம் எங்கே?? எங்கே??? தெளிவான ஆதாரம் இல்லாத நிலையில் நபித்தோழர்களின் கருத்தை விட எங்கள் ஆய்வே சிறந்தது என்று சொல்ல வருகிறார்களா..?
5) ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று நபி(ஸல்) சொல்லி இருந்து (அதற்கு தெளிவான சான்று இருந்து) அதற்கு மாற்றமாக ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நபித்தோழர்கள் முன் வைத்தால் தான் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்ற வாதம் சரியாகும்.
6) ஒரு பொருளுக்கு ஒரு முறைக் கொடுத்தால் போதும் – கொடுத்தவற்றிற்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு தெளிவான சான்று இல்லாத நிலையில் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்று நபித்தோழர்கள் சொல்லியுள்ளார்கள் என்றால் நபி(ஸல்) காலத்திலும் அதுதான் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
7) மறைந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ‘ருகூஃவிற்கு பிறகு எழுந்து மீண்டும் கைகளை கட்டிக் கொள்வது சுன்னத்’ என்ற ஒரு கருத்தை வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பெழுதிய இன்றைய ஜகாத் சர்ச்சை அறிஞர் ‘காலாகாலமாக எந்த ஒரு மக்களிடமும் நடைமுறையில் இல்லாத ஒன்றை இன்று புதிதாக ஒருவர் சொல்கிறார் என்றால் இவரது கருத்தை விட காலாகாலமாக மக்களிடம் நடைமுறையில் இருப்பதே மேல்’ என்று தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சுன்னத்தான காரியத்தை தீர்மானிப்பதற்கே இதுதான் சிறந்த அளவுகோல் என்று அவரது அறிவு ஒப்புக்கொள்கின்றதென்றால் ஒரு கடமையை தீர்மாணிப்பதற்கு மட்டும் அவரது அறிவு அவரது கருத்தை ஒப்புக் கொள்ளவில்லையா..?
நபி (ஸல்) அவர்களிடமிருந்து பாடம் படித்த நபித் தோழர்கள் ஜகாத்தை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்றுதான் விளங்கி வைத்திருந்தார்கள். எந்த ஒரு நபித்தோழரும் ஒருபொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொல்லவில்லை ஏனெனில் நபி(ஸல்) அப்படி நடைமுறைப்படுத்தவில்லை. எனவே நமது மொத்த சொத்திற்கும் (நமது அத்தியாவசிய தேவைகள் போக) மீதமுள்ளதற்கு ஆண்டுதோறும் கணக்கிட்டு ஜகாத் வழங்குவதுதான் இஸ்லாமிய நடைமுறையாகும்.
இதுதான் இஸ்லாம்.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
fine
பதிலளிநீக்கு