உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.
இதற்குக் காரணம் என்ன? மனிதனால் அல்லது மனிதர்களில் அறிஞர்கள் அடங்கிய குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாக அது அமைந்திருந்தால் அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இஸ்லாம் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) என்ற தனி மனிதராலோ அல்லது அவர்களும், அவர்களது தோழர்களும் இணைந்த ஒரு குழுவினராலோ அலசி ஆராயப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறித் திட்டம் அல்ல. மாறாக இஸ்லாம் அகில உலகங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் சர்வ வல்லமை மிக்க இறைவனால், அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அகில உலக மக்களுக்கும் நிறைவு செய்யப்பட்ட வாழ்க்கை நெறியாகக் கொடுக்கப்பட்டதாகும்.
அந்த வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை மனிதர்களுக்கு இவ்வுல வாழ்க்கை ஒரு சோதனை என்று தனது இறுதி மறை அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும 67:2 எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை பணக்காரன், தொழிலாளி முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்கு கட்டுபடுபவன் போன்ற பாகுபாடுகளுடன் நடமாடவிட்டிருப்பது சோதனையின் காரணமாகவே.
கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளுடைய இவ்வுலக வாழ்க்கையை அதாவது மிக மிக அற்பமானதொரு வாழ்க்கையை ஒப்பிட்டு அறிபவர்களே இந்த உண்மையை ஏற்க முடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கதக்க நிலையை உணர முடியும். அன்றாடம் சில சில்லறைக் காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.
இதே போல நிரந்தரமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே அற்பமான புறக்கணிக்கத்தக்க இவ்வுலக வாழ்க்கையின் நிலை புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் இவ்வுல வாழ்க்கையைவிட பெரியதொரு வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.
இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டு கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும் சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், அற்பத்தனமும் நிறைந்து காணப்படும்.
மறுமையின் நிறந்தர நித்திய வாழ்க்கையை அறிந்து வைத்திருப்பவன் இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைகோல் போரை நாய் காத்து கிடந்த கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.
இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.
ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5
இவற்றில்
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். ”அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!அல்குர்ஆன் 9:34அல்குர்ஆன் 9:35
அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ”இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
ஆகிய இரு கடுமையான எச்சரிக்கைகளையும் உண்மையான முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களிலிருந்து ஜகாத்தை முறையாக கணக்கிட்டுக் கொடுத்துவிட கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக