அதுபோலவே, புறம் பேசும் பாவமுமாகும். சும்மா..... அப்பப்ப பேசும்போது யாரைப் பற்றியாவது ஒரு பிட்டைப் போடுவது. அது உண்மையா.... இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது.
புறம் பேசுதல் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: புறம் பேசுதல் என்றால் என்ன என்றங்களுக்கு தெரியுமா? அதற்கு அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்றோம். அதற்கு அவர்கள் உங்களது சகோதரர் வெறுக்கும் வண்ணம் அவரைப் பற்றி பேசுவதாகும் என்றார்கள். அவரிடம் இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால் என்னவாகும் என்று கேட்கப்பட்டதற்கு 'அது அவரிடம் இருந்தால் நீ புறம்பேசியவனாவாய்; அது அவரிடம் இல்லாத பட்சத்தில் அவதூறு பேசியவனாவாய்' என்றார்கள். - முஸ்லிம் 6265, 2589
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.அப்பப்பா... சகோதரனின் மாமிசம் உண்பதென்பது நினைத்துப் பார்க்கவே அருவருக்கத்தக்க விஷயமல்லவா? புறம் பேசுவது எத்துணை பெரிய பாவமென்றால் இறைவன் அதற்கு இப்படியொரு உதாரணத்தைக் கூறுவான்? நாம் அதைச் சிந்தித்து உணர வேண்டாமா?
50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
புறம் பேசுவதா? அது பெண்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் என்று கைநீட்டுபவர்களே... குர் ஆனில் புறம் பேசுவது பெண்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை... பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. மாறாக, பெண்களே அநேகமாக புறம் பேசப்படுகிறார்கள். இப்போதுள்ள காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். "பிள்ளையை வளர்த்திருக்கும் அழகைப் பார்" என்று கை நீட்டப்படுவது யார் மீது??...அந்த குடும்பத்தின் தலைவனா??....இல்லையே.. அந்தக் குடும்பத்தின் தலைவிதானே... எந்தத் தாயாவது தன் குழந்தை சீர்கெட வேண்டுமென்றோ... குடும்பத்தின் மானம் போகவேண்டுமென்றோ நினைப்பாளா? ஒரு குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பது குடும்பத்தலைவனாக இருக்கும்போது பழி மட்டும் குடும்பத்தலைவியின் மீதா? எந்த நிலையிலுமே உண்மை நிலையறியாமல் எந்த முஃமின் மீதும், அதுவும் குறிப்பாக முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறப்படக்கூடாது என்பதற்கு இறைவனின் இவ்வசனமே போதுமான ஆதாரமாகும்.
24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.விரும்பியதை பேசுவதற்கும் விரும்பியதை உண்பதற்கும் மட்டுமே நமக்குப் பயன்படும் நம் நாக்கு மறுமையில் எத்துணை பெரிய காரியம் செய்யவிருக்கிறது பார்த்தீர்களா? இவ்வளவு பெரிய உடலில் இத்துணூண்டு இருக்கும் நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லாமல் இருக்க நம் இறைவன் துணை புரிய வேண்டும்.
அப்படியானால், யாரைப் பற்றியும் பேசவே கூடாதா? பேசுங்கள். கண்டிப்பாக பேசுங்கள், அவர் மனம் மகிழும் விதம் பேசுங்கள். உண்மையைப் பேசுங்கள். அவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயத்தைப் பேசுங்கள். அவர் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசுங்கள்.
அவரிடம் இருக்கும் கெட்ட விஷயங்களையும் பேசலாம், அது சொல்லப்படும் நபருக்கு உதவிகரமாக இருக்கும், அவரை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கும் என நீங்கள் நினைத்தால் பேசுங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் வட்டி தொழில் செய்கிறார், அந்த குடும்பத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் ஒருவர் உங்களிடம் வந்து விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்த உறுதி செய்யப்பட்ட உண்மையைச் சொல்லுங்கள். அம்மனிதரும் தன்னை அத்தவறிலிருந்து திருத்திகொள்ள முனையலாம். இதை நானாக சொல்லவில்லை. ஆதாரமான ஹதீஸை முன்வைக்கிறேன்.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.
நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.இந்த ஹதீஸில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) என்பவர் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றி விசாரிக்கும் பொழுது நபிகளார் தமக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்கிறார்கள். அதையும் மீறி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் 'இல்லை..ஏழையென்றாலும் பரவாயில்லை முஆவியையே மணந்துகொள்ள விரும்புகிறேன் என்றோ எத்துணை பெரிய கோபக்காரரையும் மாற்றும் பக்குவம் என்னிடத்தில் உள்ளது' என்றோ சொல்லியிருந்தால் நபிகள் வேறு ஆலோசனை எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு தம்மால் எதிர்காலத்தில் எதுவும் பிரச்சினை வந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கத்தில் உண்மையைச் சொல்லியிருப்பதால் இது புறம் பேசுவது கிடையாது.
அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953
அதையும் மீறி நாம் மூன்றாம் நபரைப் பற்றி பேச நேர்ந்தால் அந்நபர் உங்கள் முதுகுக்கு பின்னால் நிற்பதாக எண்ணிக் கொண்டு பேசுங்கள். அவர் அதனைக் கேட்க நேர்ந்தால் உங்களைப் பற்றி வருத்தம் கொள்ளமாட்டார் என நீங்கள் நினைத்தால் மட்டுமே பேசுங்கள். ஏனெனில் தவறாக நீங்கள் பேசிய ஒரு சொல் அவரை பாதித்துவிட்டால் அதுவும் ஒருவகையில் அநீதியேயாகும். எந்த பாவத்தையும் தான் விரும்புவருக்கு மன்னிப்பேன் என சொல்லியிருக்கும் இறைவன் தனக்கும் அநீதியிழைக்கப்பட்டோருக்கும் இடையில் எந்த மறைவுமில்லை (ஆதாரம் புஹாரி 1496) என சொல்லியிருப்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்வோமாக!.
அதை அவர் மனதார மன்னிக்காவிட்டால் நேரும் நிலையைச் சற்று பாருங்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் புஹாரி 2317.
நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புஹாரி , 213;முஸ்லிம் , 292
புஹாரி 6136 : அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் தன் அண்டைவீட்டாருக்கு கெடுதல் செய்யாதீர்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் விருந்தினரை உபசரியுங்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் நல்லதையே பேசுங்கள் அல்லது (தேவையற்ற பேச்சுக்கள்,பொய் மற்றும் புறம் பேசுதல் ஆகியவற்றிலிருந்து நீங்கி) மௌனமாய் இருங்கள்.
எந்த ஒரு அநீதியையும் நாம் நம் வாயால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால் கையால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால் நாம் நம் மனதால் அதை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது நபிமொழி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் தன் நாவை தவறான பேச்சிலிருந்தும் தன் மறைவான உடலுறுப்புகளை தவறான உறவிலிருந்தும் தடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை வாக்களிக்கிறேன். (புஹாரி & முஸ்லிம்)
இருவர் பேசிக்கொள்ளும்போது ஒருவர் கூறுவார்;
(மூன்றாம் நபராகிய) அவர் ஏன் அப்படிச் செய்தாரோ தெரியவில்லை.
அதற்கு அடுத்தவர்:ம்...அவர் இதற்காகத்தான் அப்படி செய்திருக்கவேண்டும். (என தன் கற்பனையில் உதித்ததை கண்,காது,மூக்கு மட்டுமல்ல..அத்ற்கு ஆடையே உடுத்தி அழகுபார்த்துவிடுவார்.. அஸ்தஃபிருல்லாஹ்)
அதற்கு முதலாமவர்: ஆமாம்....அதற்காகத்தான் அவர் அப்படி செய்திருப்பார்...
அவ்வளவுதான்... இது அப்படியே பலபேரிடம் பரவி, அந்த குறிப்பிட்ட நபரிடம் போய்ச் சேரும்போது, அவர் மயங்கி விழாத குறையாக, அவருக்குத் தோன்றாத எண்ணம் அவர்முன் உருவெடுத்து நிற்கும்போது அவர் மனம் என்ன பாடுபடும்??? அந்த மூன்றாம் நபராக நாம் இருந்தால் எவ்வளவு வேதனைப்படுவோம். நமக்கு எதை விரும்புகிறோமோ அதை பிறருக்கும் விரும்பாதவரை முழுமையான முஸ்லிமாக முடியாதே?....நாம் பிறரிடம் பேசும்போது இதைமட்டும் நினைவில் வைத்தாலே பல தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாமே சகோதரர்களே!
சுருக்கமாக, எந்தெந்த நிலைகளில் பிறரைப் பற்றி பேசலாம் என பார்க்கலாம்:
1. ஒருவர் வெளிப்படையாக ஹராமானவற்றைச் செய்யும்போது (உதா. சிகரட்,மதுவிற்கு பழக்கப்பட்டவர், வட்டிவாங்குபவர்,)4. இப்படி நாம் சொன்னால் குறிப்பிட்ட நபர் தன்னை திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும்போது. (உதா. அதிகமாகக் கோபப்படுபவர்)
104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக