ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜபல் அலி துறைமுகம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் சேகர் என்ற தோப்புவலசையைச் சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். எனது தொகுதியில் உள்ள மோர்பன்னையைச் சேர்ந்த முத்துகண்ணன் மற்றும் பண்டுவநாதன் ஆகியோருக்கு இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் பெரும் வேதனையை அளிக்கின்றது.
ஒரு சிறிய படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்த நான்கு மீனவர்களும் வேகமாக தங்கள் கடற்படை கப்பலை நோக்கி வந்துக் கொண்டிருந்ததாகவும் அதனால் அவர்களை சுட்டதாகவும் அமெரிக்கா சிறிதும் வருத்தமில்லாமல் விளக்கம் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்த்தனத்தைத்தான் இந்த விளக்கம் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை கொலைவெறியுடன் தாக்கிய அமெரிக்க படையினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட இந்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் உயிர் இழந்த மீனவர் சேகர் குடும்பத்தினருக்கு ரூ 5 கோடி இழப்பீடு பெறுவதற்கும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ 2 கோடி இழப்பீடு அமெரிக்காவிடமிருந்து பெற்று தருவதற்கும் இந்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துபாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 3 மீனவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள மனிதநேய மக்கள் கட்சியினர் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் இறந்த மீனவர் சேகரின் உடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளையும் துபாயில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியினர் மேற்கொள்வார்கள்.
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக