சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையொட்டி, நான்கு மாத இடைவெளிக்குப் பின், நேற்று முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, வீராணம் ஏரி உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் ஏரியை நம்பி, 70 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்க குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே கோடையில் கூட வீராணத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் சேமிக்காமல் திறந்து விடப்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதமே வீராணம் வற்றியது. அதனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து கடந்த ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு வந்ததையடுத்து, ஜூன் 18ம் தேதி வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 29ம் தேதி கூடுதலாக திறக்கப்பட்டதால், தற்போது, 1,800 கன அடி வரை தண்ணீர் வருகிறது. இதனால் வறண்டு கிடந்த வீராணத்தில், 507 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
வீராணம் நிரம்பியுள்ளதையொட்டி, நான்கு மாத இடைவெளிக்குப் பின், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நேற்று துவங்கியது. வினாடிக்கு, 76 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக