""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...''வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.
மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது.""எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன். இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.
கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.
கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன.பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.
விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.
குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.
இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.
கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,'' என்றார்.-நமது நிருபர்-
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக