சென்னை : ""தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம், "லேண்ட் லைன்' வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறோம்,'' என, பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 18 லட்சம், "லேண்ட் லைன்' வாடிக்கையாளர்களையும், 65 லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளோம். இது தவிர, பி.எஸ்.என்.எல்.,லின் பிராட்பேண்ட் இணைப்பை நான்கு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.
நிறுவனம் அறிவித்த பல்வேறு திட்டங்களின் மூலம், தமிழகத்தில் 22 லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்களை அதிகரித்திருக்கிறோம். எனினும், "லேண்ட் லைன்' சேவையை அளிப்பதில் ஏற்பட்ட பல பிரச்னைகளால், ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளோம். இவர்களை மீண்டும் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளராக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
தமிழகத்தில் 75 நகரங்களில், "3ஜி' சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம். இதற்கான 95 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. அனைத்து நகரங்களிலும், "3ஜி' சேவையை எளிதில் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உட்பட ஒரு சில நகரங்களில், "3ஜி' சேவையை எளிதில் பெற முடியவில்லை என, வாடிக்கையாளர்கள் கூறிய புகார் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். 65 லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்களில், ஒரு லட்சத்து 5,000 பேர் "3ஜி' சேவையையும், மற்றவர்கள் "2ஜி' சேவையையும் பயன்படுத்துகின்றனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர், "3ஜி' சேவையை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு முகமது அஷ்ரப்கான் கூறினார்.
நன்றி. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக