அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.
இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)
கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاَةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لاَ نَسْأَلُكَ رِزْقا ً نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (அல்குர்ஆன் 20 : 132)
உன்னிடமிருந்து அல்லாஹ் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். அதனால் விளையும் நற்பலன்களும் உன்னையே வந்தடைகின்றன.
அவன் உன்னிடம் தன்னை மட்டுமே வணங்கவேண்டும்; எதையும் இணையாக்கக் கூடாது என்பதையே விரும்புகிறான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْق ٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி எனக்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும் அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 56, 57, 58)
அல்லாஹ்தான் நமது ரப்பு, நாம் அவனுடைய அடிமைகள். அவன் யாவற்றையும் வளர்த்து காப்பவனாக இருக்கின்றான். அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடியார்களாக நாம் இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மீது இடைவிடாது பொழிந்துகொண்டிருக்க அவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நிராகரித்தால் அவனுக்கு மாறு செய்தால் அது எவ்வளவு பெரிய வெட்கங்கெட்ட செயலாகும்.
மனிதர்கள் எவரேனும் உபகாரம் செய்திருந்தால் அவருக்கு மாறுசெய்யவும் அவரது விருப்பத்துக்கு முரணாகவும் நடப்பதற்கு நீ நிச்சயமாக வெட்கப்படுகிறோம். அவ்வாறிருக்க நாம் அடைந்திருக்கும் அனைத்து அருட்கொடைகளும் அவனது உபகாரம்தான். தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுவது அது அல்லாஹ்வின் அருளினால்தான. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மாறு செய்வது எப்படி நியாயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَة ٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)
وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِه ِِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَج ٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيداً عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلاَةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلاَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன் 22 : 78)
அடிப்படைக் கடமைகள்
1.அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், நற்செயல்கள் செய்வதும் அல்லாஹ்வை நேசிப்பதும், அவனை கணியப்படுத்துவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது.
2.ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐந்துவேளை தொழுகையை நிலைநாட்டவேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான். இதயத்தையும் சூழ்நிலைகளையும் சீர்படுத்துகிறான். இந்த நல் அமலை அடியான் இயன்ற வகையில் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرا ً لِأنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِه ِ فَأُوْلَائِكَ هُمُ الْمُفْلِحُون
உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் (அல்குர்ஆன் 64 : 16)
நபி (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) நோய் வாய்ப்பட்டிருந்தபோது கூறினார்கள் : நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக! அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக! நூல் : புகாரி.
3.ஜகாத்
அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும். அதை முஸ்லிம்களில் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கடனில் மூழ்கியவருக்கும் வழிப்போக்கர்களுக்கும் ஜகாத்துக்குத் தகுதிபெற்ற இவர்களல்லாதவர்ககளுக்கும் வழங்கவேண்டும்.
4.வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்
எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்… (அல்குர்ஆன் 2 : 185)
நிரந்தரமாக பலவீனமடைந்து நோன்பு நோற்கச் சக்தியற்றவர் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்.
5.வசதி பெற்றவர் வாழ்வில் ஒருமுறை ஹஜ் செய்வது.
இந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகளாகும். இவையல்லாத அனைத்தும் சூழ்நிலைகளுக்கேற்ப விதியாகும் கடமைகளாகும். உதாரணம் : அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது, அல்லது காரணங்களால் ஏற்படும் கடமையாகும். உதாரணமாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது.
இக்கடமைகளை செய்வது மிக எளிதானது. இக்கடமைகளை நிறைவேற்றினால் இம்மை மறுமையில் ஈடேற்றமடைந்து நரகிலிருந்து விடுதலைபெற்று சுவனத்தினுள் நுழைவது நிச்சயம்.
كُلُّ نَفْس ٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)
Sheikh Muhammed Saalih Ibn al-Uthaimeen
தமிழில்: தாருல் ஹுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக