திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55); கட்டட தொழிலாளி. இவரது மகள் மீனாட்சி (18); குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள, தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு, தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்றார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடினர்.மாலை 4 மணியளவில், அங்குள்ள கிணற்றில், மீனாட்சி பிணமாக மிதப்பதை கண்டுபிடித்த உறவினர்கள், அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு துறையினர், மீனாட்சி பிரேதத்தை மீட்டனர். "கிணற்றுக்கு அருகில் உள்ள செடிகளில் பூப்பறிக்கும்போது, மீனாட்சி தவறி விழுந்து இறந்து இருக்கலாம்' என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
இரவு 8.30 மணியளவில், மீனாட்சியின் பிரேதம், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய, சவக்கிடங்கிற்கு வந்த டாக்டர் மற்றும் ஊழியர்கள், மீனாட்சியின் மார்பகங்கள், கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்ததையும், அறுபட்ட மார்பகங்கள், மாயமாகியிருந்ததையும் கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த, மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பிற்பகல் 3 மணிக்கு மருத்துவமனை எதிரே, கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம் டி.எஸ்.பி., தங்கதுரை, "இச்சம்பவம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். இதன் பிறகே உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மீனாட்சியின் பிரேதம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு பணியில் இருந்த மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக