"என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணமிட்டால் (மட்டும்) அதை நீங்கள் பதிவு செய்துவிட வேண்டாம். அவன் அதைச் செயல்படுத்தி விட்டால் ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அதை அவன் செய்து விட்டால் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தன் வானவர்களுக்குக்) கட்டளையிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம்
"என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்தால், அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகப் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்து விட்டால், அதைப் போன்ற பத்து நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்யாவிட்டால் அவனை மன்னித்து விடுவேன். அவன் (செய்ய நினைத்த) அந்தத் தீமையைச் செய்து விட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறினான்".
"தன் (ஒவ்வொரு) அடியானை(யும்) பார்த்து (அவனது எண்ணவோட்டங்களை) அல்லாஹ் அறிந்து கொண்டிருக்கும் நிலையில், 'இறைவா! உன்னுடைய இன்ன அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகிறானே?' என்று வானவர்கள் கேட்டதற்கு, 'அவனைக் கண்காணித்து வாருங்கள்! அந்தத் தீமையை அவன் செய்து முடித்து விட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாக அதைப் பதிவு செய்யுங்கள். அந்தத் தீமையைச் செய்வதை அவன் கைவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என் (மீதிருந்த அச்சத்தி)னால் தான் அதை அவன் கைவிட்டான்' என்று அல்லாஹ் கூறினான்".
"உங்களுள் இஸ்லாத்தைத் தம் செயல்பாடுகளால் அழகுபடுத்தும் ஒருவருக்கு, அவர் (மரணித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே பதிவு செய்யப்படுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம்
குறிப்பு:
"இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்தப் பல ஹதீஸ்களுள் ஒன்றாகும்" என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முநப்பிஹ் (ரஹ்) கூறும் குறிப்பொன்று இதில் இடம் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக