தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது.
ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரிதாக அறிவித்தாலும், அதை மையப்படுத்தாமல், தி.மு.க.விற்கு எங்கு வலிக்குமோ அங்கே பார்த்து குத்துகிறார் முன்னாள் முதல்வர். 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, அரசியல், சினிமாத்துறை ஆக்கிரமிப்பு ஆகியனதான் இத்தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்கிறார் ஜெயலலிதா.
ஆனால், தி.மு.க. கூட்டணியின் இரண்டாவது பெரிய பிரச்சார பீரங்கியான துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்ததைச் சொல்லி கலைஞர் வாக்கு கேட்கிறார், செய்ய முடியாததைச் சொல்லி ஜெயலலிதா வாக்கு கேட்கிறார் என்று பேசி வருகிறார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, சொல்லாமல் இன்னும் எத்தனையோ செய்ய கலைஞர் திட்டம் வைத்துள்ளார் என்று போகிற இடமெல்லாம் முழங்குகின்றனர் தி.மு.க. முன்னணித் தலைவர்கள்.
இலவசங்களை வழங்குவது உள்ளபடியே ஒரு ஆட்சியின் சாதனைதானா? என்கிற வினாவிற்கு விடை காண முற்பட்டபோது, இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விடைகாண புறப்பட்டபோது, இலவசங்களுக்கான செலவீனங்களுக்கு நிதி ஆதாரம் எது என்பதை அறிந்தபோது, ‘கொடுப்பவர்கள் மறைந்திருக்க, தருபவர் பெருமை கொள்கிறாரே’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமர்ப்பித்த 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் இலவச மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பார்ப்போம்.
1. ரூ.1க்கு வழங்கப்படும் அரிசித் திட்டத்திற்கு - ரூ.3,750 கோடி.
2. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - ரூ.295 கோடி
3. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.750 கோடி
4. இலவச மருத்துவ ஊர்த்திச் சேவை - ரூ.75 கோடி
5. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க - ரூ.500 கோடி
6. கலைஞர் வீட்டு வசதித் திட்டம் - ரூ.262.50 கோடி
7. நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் - ரூ.1,800 கோடி
8. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - ரூ.508 கோடி
9. ஊரக குடி நீர் திட்டங்களுக்கு - ரூ.1,183 கோடி
10. ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (மாநில அரசின் பங்கு) - ரூ.250 கோடி
பெரியார் சமத்துவ புரம் திட்டம் - ரூ.75 கோடி
11. வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் - ரூ.184 கோடி
12. திருமண நிதியுதவித் திட்டம் - ரூ.300 கோடி
13. கருவுற்றத் தாய்மார்கள் உதவித் தொகை வழங்கும் திட்டம் - ரூ.360 கோடி
14. சமையல் எரிவாயு அடுப்பு வழங்க - ரூ.140 கோடி
15. சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க - ரூ.124 கோடி
16. குழந்தை வளர்ச்சித் திட்டம் - ரூ.891 கோடி
17. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - ரூ.924 கோடி
18. முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகைக்கு - ரூ.1,002 கோடி
19. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன் - ரூ.459 கோடி
20. தாழ்த்தப்பட்டோர் கல்வி உதவி நிதித் திட்டம்-ரூ.198 கோடி
21. ஆதி திராவிடர் நல வாழ்வுத் திட்டங்களுக்கு - ரூ.894 கோடி
22. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க - ரூ.78 கோடி
23. அமைப்பு சாரா தொழிலாளர் நலன் - ரூ.50 கோடி
24. வேலையற்றோர் உதவி நிதித் திட்டம் - ரூ.60 கோடி
25. ஈழத் தமிழர் மறுவாழ்விற்கு - ரூ.100 கோடி.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்கள் என்று கூறப்பட்ட திட்டங்களே மேற்கூறப்பட்டுள்ளவையாகும். இவற்றிற்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையுன் கூட்டிப் பார்த்தால் அது ரூ.15,110.50 கோடி வருகிறது. இது மேற்கண்ட திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில், அதாவது 2011-12இல் செலவிட ஒதுக்கப்பட்ட நிதிகளாகும்.
இவ்வளவு பெரிய நிதிச் செலவை எங்கிருந்து பெற்று தமிழக அரசு ஈடுகட்டுகிறது? தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில், அதாவது 2010-11 நிதியாண்டில் ரூ.63,091.74 கோடியாகும். இதில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் உத்தேசமாக - ஆண்டு முடிவிற்கு இன்னமும் 5 நாட்கள் உள்ளதால் சரியான புள்ளி விவரம் வெளியாகவில்லை - ரூ.14,600 கோடி!
இலவசம், மக்கள் நல் வாழ்வு, மருத்துவம், கலர் டி.வி., சமையல் எரிவாயு இணைப்பு, இலவச அரிசி ஆகியன மட்டுமின்றி, தி.மு.க. அரசின் அனைத்து சமூக நலத் திட்டங்களுக்குமான நிதியை அது டாஸ்மாக் மது விற்பனை மூலம் பெற்றுவிடுகிறது என்பதே உண்மை.
2010-11 ஆம் ஆண்டில், மது உற்பத்தியின் மூலம் தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய் (Excise Duty) ரூ.6,733.90 கோடி. மது விற்பனையில் கிடைத்த விற்பனை வரி (Sales Tax) ரூ.5,757.63 கோடி. ஆக மொத்தம் அரசிற்கு மதுவின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.12,491.53 கோடி.
2002 -2003 நிதியாண்டில் இருந்து (அதாவது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து) 2010-11ஆம் நிதியாண்டு வரை மது விற்பனை மூலம் தமிழக அரசு பெற்றுள்ள மொத்த வருவாய் ரூ.56,639 கோடி! இதோடு நடப்பு நிதியாண்டில் வரும் வருவாயையும் சேர்த்தால் ரூ.71,000 கோடி ஆகும்!. மது விற்பனை மூலம் இந்த 9 ஆண்டுகளில் கிடைத்துவரும் இந்த வருவாயைக் கொண்டுதான் சத்துணவு முதல் கலர் டி.வி. வரை வழங்கப்படு்கிறது.
ஆண்டு வாரியாக மது விற்பனை வருவாய் விவரம் :
2002 - 2003 நிதியாண்டில் ரூ.2,828.09 கோடி -
2003 - 2004 நிதியாண்டில் ரூ.3,639.00 கோடி - 28.67 விழுக்காடு உயர்வு
2004 - 2005 நிதியாண்டில் ரூ.4,872.00 கோடி - 33.88 விழுக்காடு உயர்வு
2005 - 2006 நிதியாண்டில் ரூ.6,086.95 கோடி - 24.94 விழுக்காடு உயர்வு
2006 - 2007 நிதியாண்டில் ரூ.7,300.00 கோடி - 19.95 விழுக்காடு உயர்வு
2007 - 2008 நிதியாண்டில் ரூ.8,822.00 கோடி - 20.85 விழுக்காடு உயர்வு
2008 - 2009 நிதியாண்டில் ரூ.10,601.50 கோடி - 20.17 விழுக்காடு உயர்வு
2009 - 2010 நிதியாண்டில் ரூ.12,491.00 கோடி - 17.82 விழுக்காடு உயர்வு
2010 - 2011 நிதியாண்டில் ரூ.14,033.00 கோடி - உத்தேசமாக
இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவசங்களால்
இந்த செலவீனம் கொஞ்சம் அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் மது விற்பனையும் (ஆண்டுக்கு 20 விழுக்காடு) அதிகரிக்கும் அல்லவா? அந்த வரி வருவாய் இந்தச் செலவு உயர்வை சரிகட்டிவிடும். 2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவி கேள்வி எழுப்பிய போது, அயல்நாட்டு மதுபான உற்பத்தியின் மீது விதிக்கப்படும் தீர்வையின் மீது (Excise Duty) ரூ.1,800 கோடி வருவாயைக் கொண்டு ரூ.2 அரிசி திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவேன் என்று கூறினார்.
இது, கடந்த தேர்தலின் போது புரசைவாக்கம் தொகுதியில் கருணாநிதி பேசியது. அப்போதும் மதுபான விற்பனைதான், இப்போதும் மதுபான விற்பனைதான். ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.
ஆக இலவசம் என்பது ஆட்சிகளின் சாதனையல்ல, அது மது அருந்துவோர் அளிக்கும் மறைமுக ‘கொடையால்’ வழங்கப்படுகிறது. எனவே, இதற்கான பெருமை ‘குடி’மக்களையே சாரும். ஆட்சியாளர்களையல்ல!
மின்மடல் வழியே பகிர்ந்தவர் திரு.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக